Published : 22 Jun 2024 07:13 PM
Last Updated : 22 Jun 2024 07:13 PM

இடைக்கால சபாநாயகருக்கு உதவுவதை தவிர்க்க இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் திட்டம் | பதவிப் பிரமாண விவகாரம்

இடைக்கால சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப்

புதுடெல்லி: புதிதாக தேர்ந்தடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் விவகாரத்தில், இடைக்கால சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப்புக்கு உதவும் குழுவில் இடம்பெற்றுள்ள இண்டியா கூட்டணி எம்பிக்கள், தங்கள் பணிகளைச் செய்ய மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

இடைக்கால சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தாப்-பை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) தெரிவித்தார். மேலும், அவருக்கு உதவுவதற்கான குழுவில் காங்கிரஸ் மூத்த எம்பி கொடிக்குன்னில் சுரேஷ், திமுக மூத்த எம்பி டி.ஆர்.பாலு, திரிணமூல் காங்கிரஸ் மூத்த எம்பி சுதிப் பந்தோபாத்யாய, பாஜக எம்பிக்கள் ராதா மோகன் சிங், ஃபாகன் சிங் குலஸ்தே ஆகியோர் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பை அடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து வெளியிட்ட காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், "காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கொடிக்குன்னில் சுரேஷ், பாஜகவைச் சேர்ந்த விரேந்திர குமார் ஆகியோர்தான் 18வது நாடாளுமன்றத்தின் மிக மூத்த உறுப்பினர்கள். இவர்கள் இருவரும் 8 முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில், விரேந்திர குமார் மத்திய அமைச்சராகிவிட்டார். எனவே, இடைக்கால சபாநாயகராக கொடிக்குன்னில் சுரேஷ்தான் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 7 முறை தேர்வு செய்யப்பட்ட பர்த்ருஹரி மஹ்தாப் இடைக்கால சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் 6 முறை பிஜூ ஜனதா தள எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர். தற்போது பாஜக எம்பியாக தேர்வாகி உள்ளார்" என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், கொடிக்குன்னில் சுரேஷ் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, கொடிக்குன்னில் சுரேஷ், டி.ஆர். பாலு, சுதிப் பந்தோபாத்யாய ஆகியோர் இடைக்கால சபாநாயகருக்கு உதவும் தங்கள் கடமைகளைத் தவிர்த்துவிடுவார்கள் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “மரபுகள் மற்றும் பாரம்பரியத்தின்படி இடைக்கால சபாநாயகராக கொடிக்குன்னில் சுரேஷ் இருந்திருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.மேலும் அவர், "எதிர்க்கட்சிகள் பணிந்து போகப் போவதில்லை. புல்டோசர் யுக்திகளை கையாளும் மோடி-ஷா (பிரதமர் நரேந்திர மோடி - உள்துறை அமைச்சர் அமித் ஷா) அணுகுமுறை நிலைக்காது" என்று கூறியுள்ளார்.

பர்த்ருஹரி மஹ்தாப், ஏழு முறை தொடர்ந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், ஆனால் கொடிக்குன்னில் சுரேஷ் 1998 மற்றும் 2004ம் ஆண்டுகளில் மக்களவை உறுப்பினராக இருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இண்டியா கூட்டணி எம்பிக்கள் புறக்கணித்தாலும், இடைக்கால சபாநாயகருக்கு உதவும் பணிகளை பாஜக எம்பிக்கள் ராதா மோகன் சிங், ஃபாகன் சிங் குலஸ்தே ஆகியோர் மேற்கொள்வார்கள்.

“புதிய எம்.பி.க்களுடன் நாடாளுமன்ற நடவடிக்கைகளை நல்ல முறையில் தொடங்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். ஆனால், நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பே, சமூக வலைதளப் பதிவுகள் மூலம் அனைவரையும் தவறாக வழிநடத்தும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது” என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜு வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x