Published : 22 Jun 2024 05:16 PM
Last Updated : 22 Jun 2024 05:16 PM

இந்தியா - வங்கதேசம் இடையே சுகாதாரம், மீன்பிடி தொழில் உள்பட 10 ஒப்பந்தங்கள் நிறைவேற்றம்

புதுடெல்லி: சுகாதாரம், மீன்பிடி தொழில் உள்பட இந்தியா - வங்கதேசம் இடையே 10 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியதாக வெளியுறவுத் துறை செயலர் வினய் குவாத்ரா விளக்கம் அளித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக நேற்று (வெள்ளிக்கிழமை) இந்தியா வந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இன்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தலைவர்களின் சந்திப்பை அடுத்து, இரு நாட்டு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து இரு தலைவர்கள் முன்னிலையில், இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பிரதமர் மோடி - பிரதமர் ஷேக் ஹசீனா சந்திப்பை அடுத்து, அந்தச் சந்திப்பு குறித்தும், மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்தும் வெளியுறவுத் துறை செயலர் வினய் மோகன் குவாத்ரா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "வங்கதேச பிரதமரின் தற்போதைய பயணம் இரு நாடுகளுக்கும் இடையேயான உயர்மட்ட அரசியல் ஈடுபாட்டின் ஒரு பகுதியாகும். இரு தரப்பு உறவில், ஒரு புதிய திசையையும், உத்வேகத்தையும் வழங்கும் நோக்கில், இரு தலைவர்கள் முன்னிலையில் இன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரு நாடுகளுக்கும் இடையே இணைப்பு, வர்த்தகம் மற்றும் பகிரப்பட்ட வாய்ப்புகள் ஆகியவற்றை மேம்படுத்த ஒத்துழைப்பது என இரு தலைவர்களும் கூட்டாக அறிவித்தனர்.

தீவிரவாத எதிர்ப்பு, எல்லையை அமைதியான முறையில் நிர்வகித்தல் ஆகியவற்றில் ஈடுபாட்டை தீவிரப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இருதரப்பு கூட்டாண்மை அடிப்படையில் 1996ம் ஆண்டின் கங்கை நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கான கலந்துரையாடலைத் தொடங்குவதற்கு முன், இரு நாடுகளுக்கும் பொதுவான நதிகள் மற்றும் அவற்றின் மேலாண்மை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு, இந்திய உதவியுடன் வங்கதேசத்தின் தீஸ்தா நதியின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை உறுதி செய்யப்படும்.

இந்தியாவின் கடல் கோட்பாடு மற்றும் இந்தோ-பசிபிக் தொலைநோக்குப் பார்வையில் வங்கதேசம் முக்கிய நாடாகும். கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் நீலப் பொருளாதாரம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம், நமது கடல் சார் பொருளாதாரம் மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

இந்தியா - வங்கதேசம் இடையே விண்வெளி தொழில்நுட்பம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தமும் இன்று கையெழுத்தானது. வங்கதேசத்தின் ஆயுதப் படைகளின் நவீனமயமாக்கல் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு-தொழில்துறை ஒத்துழைப்பு ஆகிய இரண்டிற்கும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான அவசியத்தையும் ஆர்வத்தையும் இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.

ராஜ்ஷாஹி மற்றும் கொல்கத்தா இடையே ஒரு புதிய பயணிகள் ரயில் சேவையை நாம் தொடங்குகிறோம். கொல்கத்தா மற்றும் வங்கதேசத்தின் சிட்டகாங் இடையே மற்றொரு பேருந்து சேவையும் தொடங்க உள்ளோம். நேபாளத்தில் இருந்து வங்கதேசத்துக்கு இந்திய கிரிட் மூலம் மின்சாரம் ஏற்றுமதி செய்ய முடிவு செய்து, அதற்கான மின் வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

இரு நாடுகளின் கூட்டுறவின் மற்றொரு முக்கிய நடவடிக்கையாக, விரைவில் மருத்துவ விசா வசதியை இந்தியா வழங்க இருக்கிறது. இதன்மூலம், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் சிகிச்சை பெற இந்த சிறப்பு இ விசா வசதியைப் பயன்படுத்த முடியும்.

மேலும், வங்கதேசத்தின் ரங்பூரில் புதிய இந்திய துணைத் தூதரகத்தைத் திறக்க இந்தியா ஒப்புக்கொண்டது. ஆசியாவிலேயே வங்கதேச தயாரிப்புகளுக்கு இந்தியா மிகப்பெரிய சந்தையாக உள்ளது. சுகாதாரத்துறை, மீன்பிடித் தொழில், மனித வள மேம்பாடு என இந்தியா - வங்கதேசம் இடையே இன்று (சனிக்கிழமை) 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இரு தலைவர்களின் வருகை, கலந்துரையாடல் மற்றும் முடிவுகள் மிக மிக முக்கியமானவை" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x