Published : 22 Jun 2024 03:56 PM
Last Updated : 22 Jun 2024 03:56 PM
புதுடெல்லி: இந்தியா - வங்கதேசம் இடையேயான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தங்கள் நாட்டுக்கு வர வேண்டும் என்று ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்தார்.
இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இன்று (சனிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை அடுத்து இரு நாடுகளின் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, நரேந்திர மோடி - ஷேக் ஹசீனா முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதனைத் தொடர்ந்து இரு தலைவர்களும் செய்தியாளர்கள் முன்னிலையில் உரையாற்றினர். அப்போது பேசிய ஷேக் ஹசீனா, "வங்கதேசத்தின் 12வது நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஜனவரியில் நடந்து முடிந்து எங்களது புதிய அரசு அமைந்த பிறகு நான் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும். இந்தியா எங்களுக்கு முக்கிய அண்டை நாடு, நம்பகமான நட்பு நாடு மற்றும் பிராந்திய பங்குதாரர்.
1971ம் ஆண்டு எங்கள் விடுதலைப் போரின் போது பிறந்தது இந்தியாவுடனான எங்கள் உறவு. இந்தியா உடனான உறவின் உண்ணதத்தை வங்கதேசம் பெரிதும் மதிக்கிறது. 1971ம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலைப் போரில் உயிர் தியாகம் செய்த இந்திய மாவீரர்களுக்கு நான் வீரவணக்கம் செலுத்துகின்றேன். நமது இரு நாடுகளின் நட்புறவை மேலும் வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி வங்கதேசத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கிறேன்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT