Published : 22 Jun 2024 12:11 PM
Last Updated : 22 Jun 2024 12:11 PM

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை @ டெல்லி

புதுடெல்லி: பட்ஜெட்டுக்கு முந்தைய நிதித்துறை ஆலோசனைக் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கூடியது.

மத்திய பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அது தொடர்பாக மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசிப்பதற்கான கூட்டம் புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) கூடியது. இதில், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்பட மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்றுள்ள ஆலோசனைக் கூட்டம்

நரேந்திர மோடி அரசு மூன்றாவது முறையாக பொறுப்பேற்றதை அடுத்து நடைபெறும் முதல் ஆலோசனைக் கூட்டம் இது. அதேபோல், நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் மீண்டும் பதவியேற்றதை அடுத்து நடைபெறும் முதல் கூட்டமும்கூட. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, கூட்டத்துக்கு வந்திருந்த நிதி அமைச்சர்கள் ஒவ்வொருவரையும் அவரவர் இருக்கைக்கே சென்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவேற்றார்.

முன்னதாக பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்களை கடந்த 19-ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கினார். இதில், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, நிதித்துறை செயலர், பொருளாதாரம் சார்ந்த துறைகளின் செயலாளர்கள், வருவாய், நிதிச்சேவை, பெரு நிறுவனங்கள் ஆகியவற்றின் தலைமை பொருளாதார ஆலோசகர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக தற்போது மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் தொடர்ச்சியாக மதியத்துக்குப் பிறகு 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலும், மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். நாட்டின் மறைமுக வரி விதிப்பு விகிதங்களை முடிவு செய்யும் முக்கிய அமைப்பான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் புதிய அரசு அமைந்த பிறகு முதல்முறையாக கூட இருக்கிறது.

இந்த கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைப்பது அல்லது மாற்றி அமைப்பது குறித்து மாநில நிதி அமைச்சர்கள் தங்கள் ஆலோசனைகளை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x