Published : 22 Jun 2024 04:32 AM
Last Updated : 22 Jun 2024 04:32 AM
பாட்னா: நீட் வினாத் தாள் ரூ.32 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது என்று பிஹார் மாணவர் அனுராக் யாதவ்போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. அதற்கு ஒருநாள் முன்னதாக மே 4-ம் தேதி பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஒரு விடுதிக்கு சுமார் 25 மாணவர்களை, இடைத்தரகர்கள் அழைத்து வந்தனர். அவர்களுக்கு நீட் வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, விடைகளை மனப்பாடம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.
இதில் ஒரு மாணவர், சமூக வலைதளம் வாயிலாக சக நண்பர்களுக்கு வினாத் தாளை அனுப்பினார். அந்த நண்பர்கள் மேலும்பலருக்கு வினாத்தாளை பகிர்ந்தனர். இதுகுறித்து பாட்னா போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக பாட்னாவில் உள்ள குறிப்பிட்ட விடுதிக்கு மே 4-ம் தேதி மதியம் 2 மணிக்கு போலீஸார் சென்றனர். போலீஸாரை பார்த்ததும் மாணவர்களிடம் இருந்து வினாத்தாள்களை பறித்த இடைத்தரகர்கள் அவற்றை தீயிட்டுஎரித்தனர். பின்னர் இடைத்தரகர்களும் மாணவர்களும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில் கடந்த மே 5-ம் தேதி பாட்னாவில் ஒரு காரில் சுற்றித் திரிந்த இடைத்தரகர்கள் சிக்கந்தர் யாதவ், அகிலேஷ் குமார், பிட்டு சிங் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். நீட் தேர்வு நடைபெற்ற பிறகு சில மாணவர்களையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களில் மாணவர் அனுராக் யாதவ் போலீஸில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
எனது உறவினர் சிக்கந்தர் யாதவ் (இடைத்தரகர்), பாட்னா அருகேயுள்ள தானாபூர் நகராட்சியில் இளநிலை பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். நீட் தேர்வுக்கு ஒருநாள் முன்னதாக அவர் என்னிடம் வினாத்தாளை அளித்து விடைகளை மனப்பாடம் செய்ய அறிவுறுத்தினார். எனது உறவினர் சிக்கந்தர் யாதவும் அவரது நண்பர்களும் ஒரு வினாத்தாளை ரூ.32 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை பல்வேறு மாணவர்களுக்கு விற்பனை செய்தனர்.
இவ்வாறு மாணவர் அனுராக் யாதவ் தெரிவித்தார்.
இதுகுறித்து பாட்னா போலீஸார் கூறும்போது, “நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக இதுவரை 19 பேரை கைது செய்துள்ளோம். இதில் சில மாணவர்களும் உள்ளனர். கைதான இடைத்தரகர்களிடம் இருந்து ஒரு டைரியை கைப்பற்றி உள்ளோம். அதில் மாணவர் அனுராக் யாதவின் பெயருக்கு அருகில் ‘அமைச்சர்' என்ற அடைமொழி குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே நீட் வினாத்தாள் கசிவில் சில அரசியல் தலைவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்’’ என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT