Published : 22 Jun 2024 06:43 AM
Last Updated : 22 Jun 2024 06:43 AM
அமராவதி: ஆந்திர மாநிலத்தின் 16-வது சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில், 175 பேரவை தொகுதிகளில் தெலுங்கு தேசம் கூட்டணி மொத்தம் 164 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதன் மூலம் 4-வது முறையாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி வகிக்கிறார்.
இந்நிலையில், முதன் முறையாக 2 நாள் நடைபெறும் பேரவைகூட்டம் நேற்று கூடியது. இதில் தற்காலிக சபாநாயகராக கோரண்ட்ல புச்சைய்யா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவர் முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், நடிகர்பாலகிருஷ்ணா உட்பட அனைவருக்கும் எம்.எல்.ஏக்களாக பதவி பிரமாணம் செய்து வைத்தார். கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், சந்திரபாபு நாயுடுவை பேரவையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் மிகவும் அவமானப்படுத்தினர்.
சந்திரபாபு நாயுடுவின் மனைவிகுறித்து கீழ் தரமாக விமர்சித்தனர். இதனால் வேதனை அடைந்த சந்திரபாபு நாயுடு, “இந்தசபையில் இனி கால் பதிக்க மாட்டேன். அப்படியே வர நேர்ந்தால் மீண்டும் முதல்வராகத்தான் கால் பதிப்பேன்” என சபதமிட்டு வெளியேறினார்.
சரியாக 30 மாதங்கள் கடந்தது. தற்போது சந்திரபாபு நாயுடு போட்ட சபதத்தின் படியே மீண்டும்தெலுங்கு தேசம் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சிஅமைத்துள்ளது. ஜெகன் கட்சியினர் வெறும் 11 இடங்களிலேயே வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட இழந்தனர். ஆதலால்,நேற்று பேரவைக்கு வரும் போது, சந்திரபாபு, பேரவை வாசலில் தேங்காய் உடைத்து விட்டுதான் உள்ளே காலடி எடுத்து வைத்தார்.
பின்வாசல் வழியாக வந்த ஜெகன்: தேர்தலில் படு தோல்வியை சந்தித்துள்ள முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, நேற்று எம்.எல்.ஏவாக பதவியேற்க பேரவையின் பின்வாசல் வழியாக காரில் வந்தார். பின்னர் அவர் துணை சபாநாயகர் அறையில் தனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் காத்திருந்தார். தற்காலிக சபாநாயகர், ஜெகனின் பெயரை குறிப்பிட்டு அழைக்கையில் அப்போது, அவைக்குள் வந்து, எம்.எல்.ஏவாக பதவி பிரமாணம் செய்தார். பின்னர், அங்கிருந்த சந்திரபாபு நாயுடு மற்றும் அவையோருக்கு வணக்கம் செலுத்தியவாறு, தற்காலிக சபாநாயகரிடம் சென்று வணக்கம் தெரிவித்து விட்டு அங்கிருந்து நேராக காரில் ஏறி வீட்டிற்கு சென்று விட்டார்.
இன்று 11 மணிக்கு சபாநாயகர் தேர்வு நடைபெறும். அதில் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த நிர்வாகி அய்யண்ண பாத்ருடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளார். நேற்று மொத்தம் 172 எம்.எல்.ஏக்கள் பதவி பிரமாணம் செய்துக்கொண்டனர். மீதமுள்ள 3 பேர் இன்று சனிக்கிழமை பதவி பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT