Published : 11 May 2018 02:33 PM
Last Updated : 11 May 2018 02:33 PM
பாகிஸ்தானின் தந்தை என்றழைக்கப்படும் முகமது அலி ஜின்னா மிகச்சிறந்த மனிதர்(மகா புருஷர்) என்று பாஜக எம்.பி. சாவித்ரி பாய் புலே தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகார் பல்கலைகழகத்தில் முகமது அலி ஜின்னா புகைப்படத்தை அகற்ற வேண்டும் எனக் கோரி பாஜகவினருக்கும், முஸ்லிம் மாணவர்கள் அமைப்பினருக்கும் கடந்த வாரம் கடும் மோதல் ஏற்பட்டது. அதில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நாட்டின் சுதந்திரத்துக்காக மகாத்மா காந்தியுடன், இணைந்து ஜின்னா போராடி இருந்தாலும், பாகிஸ்தான் எந்த வகையிலும் காந்தியின் புகைப்படத்தை அங்கு பயன்படுத்தவில்லை. அப்படி இருக்கையில் ஜின்னாவின் புகைப்படத்தை இந்தியாவில் பயன்படுத்தக்கூடாது, அவரின் இல்லத்தையும் அகற்ற வேண்டும் என்று பாஜக தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம், பாஹாரியாச் தொகுதி மக்களவை எம்.பி. சாவித்ரி பாய் புலே, ஜின்னாவை புகழ்ந்து பேசியுள்ளது அந்த கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவினர் ஒரு தரப்பினர் ஜின்னாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதவும், சிலர் ஆதரவு தெரிவிப்பதும் அந்தக் கட்சியின் தொண்டர்களுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
எம்.பி. சாவித்ரி பாய் புலே டெல்லியில் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், முகமது அலி ஜின்னா மிகச் சிறந்த மனிதர்.நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர் ஜின்னா. மக்களவையில் ஜின்னாவின் புகைப்படங்களை மாற்றி வைக்க வேண்டும். அவரை மரியாதையுடன் நினைவு கூற வேண்டும். ஜின்னாவின் புகைப்படங்களை அமைப்பதற்கான சரியான இடத்தை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆனால், இதுபோன்ற விஷயத்தில் இருந்து திசைதிருப்பவே தலித் பிரச்சினைகளை கிளப்புகிறார்கள். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. எந்த மதமாக இருந்தாலும், சாதியாக இருந்தாலும் சரி நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் துறந்துள்ளனர். இதுபோன்றவர்களை நாம் மரியாதையாக நடத்த வேண்டும். நாட்டின் சுதந்திரத்துக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களை மதிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT