Published : 21 Jun 2024 11:24 PM
Last Updated : 21 Jun 2024 11:24 PM
மும்பை: பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த் அடல் சேது பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு மகாராஷ்டிர அரசு விளக்கமளித்துள்ளது.
மும்பை மற்றும் நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கி.மீ. தூரத்துக்கு அடல் சேது என்ற பிரம்மாண்ட கடல் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிக நீளமான கடல்வழி பாலம் என்ற சிறப்பை பெற்றுள்ள இந்த பாலம், மும்பை சிவ்ரி பகுதியில் தொடங்கி நவிமும்பை புறநகரான சிர்லேவில் முடிவடைகிறது. 2018ஆம் தொடங்கிய இப்பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது.
ரூ.17,843 கோடி செலவில் 6 வழிச்சாலையாக மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த நிலையில், திறக்கப்பட்ட ஐந்தே மாதங்களில் அடல் சேது பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக சில புகைப்படங்களை மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல் எக்ஸ் தளத்தில் வெளியிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார். இதனையடுத்து இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள மும்பை பெருநகர மேம்பாட்டு ஆணையம், அடல் சேது பாலத்தின் முக்கிய பகுதியில் விரிசல் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடல் சேது பாலத்தை இணைக்கும் சர்வீஸ் சாலையில் தான் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள அந்த சாலை, பிரதான பாலத்தின் ஒரு பகுதி அல்ல. மேலும் இந்த விரிசல்கள் கட்டுமான குறைபாடுகளால் ஏற்பட்டதல்ல. இவற்றால் பாலத்தின் கட்டமைப்புக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது” என்று தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT