Published : 21 Jun 2024 06:53 PM
Last Updated : 21 Jun 2024 06:53 PM

மகாராஷ்டிரா உள்ளிட்ட 4 மாநில வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கும் பணியை தொடங்கியது தேர்தல் ஆணையம்

டெல்லியில் இந்திய தேர்தல் ஆணைய அலுவலகப் பகுதி

புதுடெல்லி: மகாராஷ்டிரா, ஹரியாணா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கியுள்ள இந்திய தேர்தல் ஆணையம், இந்த மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கும் பணிகளை தொடங்கி உள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: 18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல்கள் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான ஆயத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. 2024 ஜூலை 1ம் தேதியை, தகுதித் தேதியாக வைத்து வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படுகிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் தற்போதுள்ள சட்டமன்றங்களின் பதவிக்காலம் முறையே 26.11.2024, 03.11.2024 மற்றும் 05.01.2025 அன்று முடிவடைய உள்ளது. இந்த சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள், அவற்றின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பு நடத்தப்பட வேண்டும்.

இது தவிர, தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவையை அமைப்பதற்காக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலும் நடத்தப்பட உள்ளது. சமீபத்தில் முடிவடைந்த மக்களவைத் தேர்தல்களில் ஜம்மு-காஷ்மீர் மக்களின் பெரும் பங்கேற்பைக் கண்ட தேர்தல் ஆணையம், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வாக்காளர் பட்டியலை 2024 ஜூலை 1-ஐ தகுதித் தேதியாகக் கொண்டு புதுப்பிக்க உத்தரவிட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலின் கடைசி சிறப்பு சுருக்க திருத்தம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2024 ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு நடத்தப்பட்டது. தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) சட்டம், 2021 மூலம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-ன் பிரிவு 14-ல் திருத்தம் செய்யப்பட்ட பிறகு, ஒரு வருடத்தில் நான்கு தகுதி தேதிகள் வழங்குவதற்கான ஏற்பாடு இப்போது நடைமுறையில் உள்ளது.

அதன்படி, தகுதியுள்ள மற்றும் பதிவு செய்யாத அனைத்து குடிமக்களுக்கும் வாக்காளர் பட்டியலில் தங்களைப் பதிவு செய்து கொள்வதற்கும், அதன் மூலம் வரவிருக்கும் தேர்தல்களில் வாக்களிக்கும் வாய்ப்பைப் பெறுவதற்கும் ஆணையம் வகை செய்துள்ளது. 01.07.2024 முதல் ஹரியானா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல்களின் 2-வது சிறப்பு சுருக்க திருத்தத்தை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.

தூய்மையான, உள்ளடக்கிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல்களே சுதந்திரமான, நியாயமான மற்றும் நம்பகமான தேர்தல்களின் அடித்தளம் என்று தேர்தல் ஆணையம் உறுதியாக நம்புகிறது. வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக, வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்கு முன்பு தீவிர மறுபரிசீலனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணையம் சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

வாக்குச்சாவடி மட்டத்திலான அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று தகவல்களைத் திரட்டவும், வாக்குச்சாவடிகளை வரையறுக்கவும் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதன்படி வீடு வீடாகச் சென்று சரிபார்த்தல் மற்றும் வாக்குச்சாவடி வரையறை 25.06.2024 முதல் 24.07.2024 வரை மேற்கொள்ளப்படும். வரைவு வாக்காளர் பட்டியல் 25.07.2024 அன்று வெளியிடப்படும். வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தங்களைச் செய்ய விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 25.07.2024 முதல், 09.08.2024 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இதற்கான தேதியை தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பார். வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புக்கு பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் 20.08.2024 அன்று வெளியிடப்படும்.

குறைபாடுகள் இல்லாத வாக்காளர் பட்டியலை உறுதி செய்வதில் ஆணையத்தின் தீவிரமான நீடித்த கவனம் எப்போதும் உள்ளது, இதனால் தகுதியுள்ள எந்தவொரு குடிமகனும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான உரிமையை இழக்கக்கூடாது; எந்தவொரு போலியான, தகுதியற்ற பதிவுகளும் இல்லாமல் குறைபாடுகள் இல்லாத வாக்காளர் பட்டியலை பராமரிக்க முடியும். எனவே, தகுதியுள்ள வாக்காளர்கள் இதுவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருந்தால், எதிர்வரும் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த முன்வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x