Published : 21 Jun 2024 04:47 AM
Last Updated : 21 Jun 2024 04:47 AM

பிரதமர் மோடியுடன் அமெரிக்க குழு சந்திப்பு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்காவின் உயர்நிலைக் குழு டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசியது.

அமெரிக்க நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி, அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவு விவகாரக் குழு உறுப்பினர் மைக்கேல் மெக்கால் தலைமையிலான 6 பேர் அடங்கிய உயர்நிலைக் குழு இந்தியாவில் முகாமிட்டுள்ளது. இந்தக் குழு, இந்தியாவின் இமாச்சல பிரதேசம், தர்மசாலாவில் திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசியது. திபெத் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் நகலை அமெரிக்க குழுவினர் தலாய் லாமாவிடம் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து நான்சி பெலோசி தலைமையிலான அமெரிக்க உயர்நிலைக் குழு பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்தது. அப்போது திபெத் விவகாரம், தைவான் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் கூறியதாவது: திபெத்தை சட்டவிரோதமாக சீனா ஆக்கிரமித்து உள்ளது. சீன ராணுவத்தின் பிடியில் இருந்து திபெத்தை விடுவிக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. இந்த சூழலில் திபெத் பிரச்சினைக்கு சீனா சுமுக தீர்வு காண வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இந்த தீர்மானத்தின் நகலை தலாய் லாமாவிடம் அளிக்க அமெரிக்க உயர்நிலைக் குழு இந்தியாவுக்கு வருகை தந்தது. அமெரிக்க குழுவின் வருகைக்கு சீனா பகிரங்கமாக எதிர்ப்பை பதிவு செய்தது.

கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டில் அப்போதைய அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த நான்சிபெலோசி தைவானுக்கு சென்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தைவானின் கடல் எல்லை பகுதிகளில் சீன கடற்படையின் போர்க்கப்பல்கள் குவிக்கப்பட்டன. சீன போர் விமானங்கள் தைவான் எல்லை பகுதிகளில் அத்துமீறி பறந்தன.

தற்போதும் சீனாவின் எச்சரிக்கையை மீறி நான்சி பெலோசி இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். ஆனால் தைவானை அச்சுறுத்தியது போன்று இந்தியாவிடம் சீன ராணுவம் எவ்வித அத்துமீறலிலும் ஈடுபட முடியாது.

நான்சி பெலோசி குழுவினரை பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக சந்தித்துப் பேசி உள்ளார். இதன்மூலம் திபெத் விவகாரத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து சீனாவுக்கு பகிரங்கமாக சவால் விடுத்து உள்ளன.

இவ்வாறு அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x