Published : 20 Jun 2024 03:20 PM
Last Updated : 20 Jun 2024 03:20 PM

பிஹார் அரசு கொண்டுவந்த 65 சதவீத இடஒதுக்கீடு ரத்து - பாட்னா உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பாட்னா: பிஹாரில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 65 சதவீத இடஒதுக்கீட்டை பாட்னா உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

பிஹார் மாநிலத்தில் சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டார். 1931-ம் ஆண்டுக்கு பிறகு பிஹாரில் சமீபத்தில் தான் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் அறிக்கை கடந்த ஆண்டு அக்.2-ம் தேதி வெளியானது.

இதில் பிஹார் மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 64 சதவீதம் பேர் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து இந்த அறிக்கையின்படி, அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் உள்ள இடஒதுக்கீட்டை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தும் மசோதா பிஹார் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

புதிய மசோதாப்படி இதர பிற்படுத்தப்பட்டோருக்கான (ஓபிசி) இடஒதுக்கீடு 18 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான (இபிசி) இடஒதுக்கீடு 25 சதவீதம், எஸ்.சி. பிரிவினருக்கான ஒதுக்கீடு 20 சதவீதம், எஸ்.டி.பிரிவுக்கான இட ஒதுக்கீடு 2 சதவீதம் ஆகும்.

இதுதவிர, மத்திய அரசு கொண்டு வந்த பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடும் அமலில் உள்ளது. இதன் மூலம் பிஹாரில் மொத்த இடஒதுக்கீடு 75 சதவீதமாக அதிகரித்தது.

இதையடுத்து புதிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை இன்று (ஜூன் 20) பாட்னா உயர் நீதிமன்றம் அளித்தது. அதில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 65 சதவீத இடஒதுக்கீட்டை அதிரடியாக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில், “65 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த ஆண்டு பிஹார் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட திருத்தங்கள் அரசியலமைப்பின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டவை என்றும், அரசியலமைப்பின் 14, 15 மற்றும் 16வது பிரிவின் விதிகளை 65 சதவீத இடஒதுக்கீடு சட்டம் மீறுவதாக உள்ளது” என்றும் கூறி அவற்றை ரத்து செய்துள்ளது.

“பாட்னா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு துரதிர்ஷ்டவசமானது. இந்த சட்டத்தை எதிர்த்த மனுதாரரின் சமூகப் பின்னணியைப் பார்க்க வேண்டும். திரைமறைவில் இருந்து இந்த சட்டத்தை தடை செய்ய முயற்சிக்கும் நபர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முதல்வர் நிதிஷ் குமார் மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்துவும்” என்று இந்த சட்டத்தை கொண்டுவர முக்கிய காரணமாக இருந்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் மனோஜ் ஜா தெரிவித்துள்ளார்.

நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் பிஹார் அரசுக்கு இந்த தீர்ப்பு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x