Published : 20 Jun 2024 04:56 AM
Last Updated : 20 Jun 2024 04:56 AM

பிஹாரில் ரூ.1,749 கோடி செலவில் நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

ராஜ்கிர்: பிஹார் மாநிலத்தில் ரூ.1,749 கோடிசெலவில் கட்டப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பிஹார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள ராஜ்கிர் நகரில் கடந்த 2014-ம் ஆண்டு நாளந்தா பல்கலைக்கழகம் தற்காலிக இடத்தில் 14 மாணவர்களுடன் செயல்படதொடங்கியது. பழங்காலத்தில் இதே நகரில் அமைந்திருந்த உலகப்புகழ் பெற்ற நாளந்தா பல்கலைக் கழகத்தின் மறுவடிவம்தான் இது.

மத்திய ஆராய்ச்சி பல்கலைக்கழகமான இது, சர்வதேச பல்கலைக்கழகம் ஆகும். வெளியுறவு அமைச்சகத்தின்கீழ், கிழக்கு ஆசியா உச்சி மாநாட்டின் 18 உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் இது செயல்படுகிறது.

இந்த பல்கலைக்கழகத்துக் கான புதிய வளாகத்தின் கட்டுமான பணி கடந்த 2017-ம் ஆண்டுதொடங்கியது. பணிகள் முடிவடைந்த நிலையில், நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். அப்போது, ஒருமரக்கன்றையும் நட்டார். இந்த விழாவில் பிஹார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத், முதல்வர் நிதிஷ் குமார், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், 17 நாடுகளின் தூதர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: பிரதமராக3-வது முறையாக பதவியேற்ற 10 நாட்களுக்குள் நாளந்தாவை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்துக்கு இது ஒரு சாதகமான அறிகுறி. நாளந்தா என்பது வெறும் பெயர் அல்ல. அது ஒரு அடையாளம், ஒரு மரியாதை. ஒரு மதிப்பு, ஒரு மந்திரம், ஒரு பெருமை. நெருப்பால் புத்தகங்களை எரிக்க முடியும் ஆனால் அறிவை அழிக்க முடியாது என்ற உண்மையின் பிரகடனம்தான் நாளந்தா.

நாளந்தா என்பது கடந்த கால இந்தியாவின் மறுமலர்ச்சி மட்டுமல்ல. உலகம் மற்றும் ஆசியாவின் பல நாடுகளின் பாரம்பரியம் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் அறிவின் சர்வதேச மையமாக இந்தியா மாற வேண்டும் என்பதே எனது நோக்கம். இந்தியா மீண்டும் உலகின் மிக முக்கியமான அறிவு மையமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது நோக்கம்.

இந்த பல்கலைக்கழகத்தில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தமாணவர்கள் படித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. உலகம் ஒரேகுடும்பம் என்பதற்கு சரியான உதாரணமாக நாளந்தா விளங்குகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சுமார் 450 ஏக்கர் பரப்பளவில், ரூ.1,749 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த வளாகத்தில் 40வகுப்பறைகளுடன் கூடிய 2 பிளாக்குகள் உள்ளன. இதில் 1,900மாணவர்கள் அமர்ந்து பயில முடியும். தலா 300 பேர் அமரும் வசதியுடன் கூடிய 2 ஆடிட்டோரியம், 550 மாணவர்கள் தங்குவதற்கான விடுதி அறைகளும் இங்கு உள்ளன. இதுதவிர, ஒரு சர்வதேச மையம், 2,000 பேர் வரை அமரும் வசதி கொண்ட ஆம்பிதியேட்டர் அரங்கம், ஆசிரியர் கிளப் மற்றும்விளையாட்டு வளாகம் ஆகியவையும் இந்த வளாகத்தில் அமைந்துள்ளன.

இந்த வளாகத்தை திறந்து வைப்பதற்கு முன்பு, அங்கிருந்து சுமார்20 கி.மீ. தொலைவில், சிதிலமடைந்த நிலையில் இருக்கும் பழங்கால நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.

உலகின் முதலாவது பல்கலை.. தற்போதைய பிஹார் மாநிலத்தின் மையப் பகுதியான நாளந்தாவுக்கு அருகில் உள்ள ராஜ்கிர் (ராஜகிரகம்) நகரில் கி.பி. 5-ம்நூற்றாண்டில் குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்டது நாளந்தா பல்கலைக்கழகம். இங்குள்ள ரத்னோதாதி என்ற 9 மாடி கட்டிடத்தில் ‘தர்ம குஞ்ச்’ அல்லது ‘உண்மையின் மலை’ என்ற நூலகத்தில் 90 லட்சம் புத்தகங்கள், புனிதமான கையெழுத்து பிரதிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.

நாளந்தா, உலகின் முதல் உண்டு உறைவிட பல்கலைக்கழக மாக விளங்கியது. இங்கு 2,000ஆசிரியர்கள், 10,000 மாணவர்கள் இருந்தனர். பவுத்தம் பற்றிய ஆய்வு படிப்புகளுடன் வானியல், மருத்துவம், தர்க்கம், கணிதம் போன்ற பாடங்களும் கற்பிக்கப்பட்டன. நாளந்தா இடிபாடுகள் 2016-ல் உலக பாரம்பரிய பகுதியாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.

கடந்த 2006-ல் நாளந்தா பல்கலைக்கழகத்தின் மீள் உருவாக்கத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முன்மொழிந்தார், 2010-ல் நாளந்தா பல்கலைக்கழக சட்டம் நிறைவேற்றப்பட்டு, சுமார் 800 ஆண்டுகளுக்கு பிறகு நாளந்தா பல்கலைக்கழகம்2014-ல் மீண்டும் திறக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x