Published : 20 Jun 2024 06:26 AM
Last Updated : 20 Jun 2024 06:26 AM

நீட் தேர்வு சர்ச்சை: காங்கிரஸ் நாளை நாடு தழுவிய போராட்டம்

கோப்புப் படம்

புதுடெல்லி: நீட் தேர்வு சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ள சூழ்நிலையில் மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமையை (என்டிஏ) கண்டித்தும், மாணவர்களுக்கு நீதி கோரியும் நாடு முழுவதும் நாளை (ஜூன் 21) போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அனைத்து பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், பொறுப்பாளர்கள், அனைத்து பிரிவு தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளதாவது:

இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை ஜூன் 4-ல்வெளியிட்டது. அதில், சில விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் உயர்த்தி காட்டப்பட்டு முறைகேடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று நீட் வினாத்தாள் கசியவிடப்பட்டதால் தேர்வு முடிவுகளை நம்பியிருந்த லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது மாணவர்களிடையே மிகப்பெரிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

பிஹார், குஜராத், ஹரியாணாவில் நடத்தப்பட்ட விசாரணையில் பலர் கைது செய்யப்பட்டதிலிருந்து நீட் தேர்வில் திட்டமிட்டு முறைகேடு செய்யப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. இது, பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெறும் முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

உச்ச நீதிமன்றமும் இந்த குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை உணர்ந்து இத்தகை அலட்சியங்களை சகித்துக் கொள்ள முடியாது என்று கண்டித்துள்ளது. இத்தகைய முறைகேடுகள் தேர்வு செயல்முறையின் நம்பகத்தன்மையை குலைப்பதுடன், எண்ணற்ற அர்ப்பணிப்பானமாணவர்களின் எதிர்காலத்தையும் பாதிக்கிறது. இதற்காகத்தான், கடுமையான சட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் இளைஞர்களை பாதுகாக்க காங்கிரஸ் கட்சி உறுதிபூண்டுள்ளது.

நீட் தேர்வில் நடைபெற்றுள்ள மாபெரும் ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டித்தும், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் செயலற்ற தன்மை மற்றும்தொடர் மவுனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவர்களுக்கு நீதி கோரியும் மாநில தலைமையகங்களில் நாளை மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டும். அதில், முக்கிய தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x