Published : 20 Jun 2024 05:42 AM
Last Updated : 20 Jun 2024 05:42 AM
விஜயவாடா: ஜனசேனா கட்சி தலைவர் பவன்கல்யாண் விஜயவாடாவில் உள்ள அவரது அலுவலகத்தில் ஆந்திர மாநிலத்தின் துணைமுதல்வராக நேற்று பொறுப்பேற்றார்.
நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண், தற்போதைய ஆந்திர மாநில அரசியலின் ‘கேம் சேஞ்சர்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும், சிறையில் இருந்த சந்திரபாபு நாயுடுவை நேரில் சென்று சந்தித்த பின்னர், சிறைக்கு வெளியே வந்து, “தெலுங்கு தேசம் கட்சியுடன் ஜனசேனா கட்சியும் இணைந்து வரும் தேர்தலில் போட்டியிடும்” என அறிவித்தார். இதுதான் ஜெகனின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்து விட்டது. அதன் பின்னர், பாஜகவுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்த சந்திரபாபு நாயுடுவை சமாதானம் செய்து, பாஜகவுடன் கூட்டணி அமைக்க பவன் கல்யான் உறுதுணையாக நின்றார். அதன் பின்னர் ஆந்திராவில் தெலுங்கு தேசம்-ஜனசேனா-பாஜக எனும் வெற்றிக் கூட்டணி அமைந்தது. இது ஜெகனின் படுதோல்விக்கு காரணமாகி விட்டது.
இதனை தொடர்ந்து, தொகுதி பங்கீட்டில் தனக்கு வழங்கிய எம்.பி. சீட்களை குறைத்துக் கொண்டு, அதனை பாஜகவுக்கு வழங்கி ஒத்துழைத்தார் பவன் கல்யாண்.
40 ஆண்டுகால அரசியல் அனுபவம் மிக்க சந்திரபாபு நாயுடுவுடன் கைகோர்த்து, ஆந்திர அரசியலை மட்டுமல்லாது, மத்திய அரசுக்கு உறுதுணையாக நிற்கும் அளவிற்கு பவன் கல்யாணின் அரசியல் கண்ணோட்டமும், தியாகங்களும் அவரை ‘கேம் சேஞ்சர்’ என்றழைக்கும் நிலைக்கு கொண்டு சென்றன.
பிரதமர் நரேந்திர மோடி கூட இவரை புகழ்ந்து தள்ளியுள்ளார். புரட்சிகரமான சிந்தனையுடையவர் பவன் கல்யாண். மேலும் அதிகமாக புத்தகங்களை படிக்கும் ஆர்வமும் கொண்டவர் பவன் கல்யாண். இவர் வெற்றி பெற்றதும், தனது அண்ணன் நடிகர் சிரஞ்சீவியை ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து ஆசி பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT