Last Updated : 16 May, 2018 08:19 AM

 

Published : 16 May 2018 08:19 AM
Last Updated : 16 May 2018 08:19 AM

சட்டப்படி ஆளுநர் எப்படி முடிவெடுக்கலாம்?

மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தல் ஒருவழியாக நடந்து முடிந்துள்ளது. பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளும் அடுத்தடுத்த எண்ணிக்கையில் இடங்களைப் பெற்று யாருக்கும் தனிப் பெரும்பான்மை இல்லை என்ற நிலையைப் பெற்றுள்ளன. பாஜக 100-க்கும் அதிகமான இடங்களைப் பெற்றிருந்தாலும், பெரும்பான்மை எண்ணிக்கையை அடையாததால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இந்நிலையில், காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்து தங்களை ஆட்சி அமைக்க அழைக்கும்படி ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

தற்போது ஆளுநரின் கரங்களில் கர்நாடக அரசியலின் தலைவிதி உள்ளது. இந்நிலையில், இதுபோன்ற சூழ்நிலைகளில் ஆளுநர் எப்படி முடிவெடுக்க வேண்டும் என்று சட்டப்பூர்வமாக சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மத்திய - மாநில அரசுகளுக்கிடையே அதிகார பகிர்வை சமப்படுத்துவதற்காக 1983-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சர்க்காரியா ஆணையம் சில பரிந்துரைகளை அளித்துள்ளது. தேர்தலுக்கு முன்பாக ஏற்பட்ட கூட்டணி அடிப்படையில் ஆட்சி அமைக்க அழைப்பது, அதிக இடங்களைப் பெற்ற கட்சி என்ற அடிப்படையில் அழைப்பது, தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஏற்படும் கூட்டணி அடிப்படையில் அழைப்பது, தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைத்து ஆட்சியில் இடம்பெறாமல் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் கட்சிகள் என்ற அடிப்படையில் அழைப்பது என பல அம்சங்களை பட்டியலிட்டுள்ளது. இந்த வாய்ப்புகளில் ஏதாவது ஒன்றை ஆளுநர் தேர்வு செய்யலாம் என்று சர்க்காரியா அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே, கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், மூன்று முடிவுகளை வரிசைப்படுத்தி தெரிவித்துள்ளது.

1. தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அடிப்படையில் ஆட்சி அமைக்க அழைப்பது

2. தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அடிப்படையில் ஆட்சி அமைக்க அழைப்பது

3. அதிக இடங்களைப் பெற்ற கட்சி அடிப்படையில் ஆட்சி அமைக்க அழைப்பது

இந்த வரிசைப்படி மட்டுமே ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இருந்தாலும், ஆளுநருக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், சூழ்நிலைக்கு ஏற்ப அவர் எடுக்கும் முடிவு சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்றதாகவே உள்ளது.

கோவா, மணிப்பூர்

கடந்த ஆண்டு கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடந்தபோது யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் அதிக இடங்களைப் பிடித்தாலும், பாஜக கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது. அதேபோன்று, சில மாதங்களுக்கு முன் மேகாலயாவில் நடந்த தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் அதிக இடங்களைப் பிடித்தது. ஆனால், என்பிபி கட்சியைச் சேர்ந்த கொன்ராட் சங்மா 5 கட்சி கூட்டணியை அமைத்து ஆட்சியைப் பிடித்தார். இதில் ஆளுநரின் முடிவுகளே முக்கிய இடம் வகித்தன.

இதேபோன்று கர்நாடகா ஆளுநர் வாஜுபாய் ரூடாபாய் வாலா என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதை கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள அரசியல் ஆர்வலர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். தற்போது கர்நாடகா ஆளுநராக உள்ள வாஜுபாய் ரூடாபாய் வாலா குஜராத் சட்டப் பேரவையில் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தபோது, சபாநாயகராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நரேந்திர மோடியின் பெரும் நம்பிக்கையைப் பெற்ற ஆளுநரின் முடிவு கர்நாடக அரசியலில் எத்தகைய திருப்பத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x