Published : 19 Jun 2024 04:42 PM
Last Updated : 19 Jun 2024 04:42 PM

“தலாய் லாமாவின் மரபு என்றும் நீடிக்கும்; நீங்கள் போய்விடுவீர்கள்” - சீன அதிபர் மீது நான்சி பெலோசி சாடல்

தரம்சாலா (இமாச்சலப் பிரதேசம்): திபெத் புத்தமத தலைவர் தலாய் லாமாவின் மரபு என்றென்றும் இருக்கும் என தெரிவித்த அமெரிக்க முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி, “ஆனால் நீங்கள் போய்விடுவீர்கள்” என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.

இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் உள்ள ஆசிரமத்தில் தங்கி இருக்கும் திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமாவை, அமெரிக்காவின் செல்வாக்கு மிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 பேர் கொண்ட குழ இன்று சந்தித்தது. திபெத் பிரச்சினைக்குத் தீர்வு காண சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் அமெரிக்கா இயற்றியுள்ள மசோதா, அதிபர் ஜோ பைடனின் கையொப்பத்திற்காகக் காத்திருக்கும் நிலையில், அது தொடர்பாக தலாய் லாமாவுடன் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்பை அடுத்து அமெரிக்க எம்பிக்களுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பேசிய நான்சி பெலோசி, "அறிவு, பாரம்பரியம், இரக்கம், ஆன்மாவின் தூய்மை மற்றும் அன்பின் செய்தியுடன் புனித தலாய் லாமா நீண்ட காலம் வாழ்வார். அவரது மரபு என்றென்றும் வாழும். ஆனால் சீன அதிபர், போய்விடுவார். உங்களுக்கு யாரும் பெருமை சேர்க்க மாட்டார்கள்.

நான் சீன அரசாங்கத்தை விமர்சிப்பதை தலாய் லாமா ஏற்றுக்கொள்ளமாட்டார். நான் அவ்வாறு பேசியபோது, என்னிடம் இருக்கும் எதிர்மறை அணுகுமுறைகளை அகற்ற பிரார்த்தனை செய்வோம் என்றுதான் தலாய் லாமா சொன்னார். ஆனால், மாற்றம் வந்து கொண்டிருக்கிறது என்பதை சொல்ல அவர் என்னை அனுமதிப்பார் என்று நம்புகிறேன். எதிர்காலம் குறித்த நேர்மறை சிந்தனை, நம்பிக்கையைத் தருகிறது என்றும், மற்றவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள திபெத்திய மக்களின் நம்பிக்கை எல்லா மாற்றங்களையும் ஏற்படுத்தப் போகிறது என்றும் எங்கள் சகாக்கள் கூறியுள்ளனர்.

திபெத் சிக்கலுக்கு தீர்வு காண சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட சட்டத்தைப் பற்றி எங்கள் சகாக்கள் பேசியதை நீங்கள் கேட்டீர்கள். தலாய் லாமாவின் ஆன்மிக ஆசீர்வாதத்துடன் இதற்காக நாங்கள் நீண்ட காலமாக போராடினோம். இதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், நாங்கள் முன்னேறினோம்.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் நிலைமை மாறி இருக்கிறது. ஏனெனில், இந்த மசோதா சீன அரசாங்கத்திற்கு ஒரு செய்தியாகும். திபெத்தின் சுதந்திரம் குறித்த நமது சிந்தனையிலும், புரிதலிலும் தெளிவு உள்ளது. எங்கள் தூதுக்குழுவின் தலைவரும், வெளியுறவுக் குழுவின் தலைவருமான மைக்கேல் மெக்கால், கொள்கை வகுப்பதில் மட்டுமல்ல, அதனை அர்த்தமுள்ள வகையில் செயல்படுத்துவதிலும் அவர் தேர்ச்சி பெற்றவர்.

சீன அதிபர், அமெரிக்க தலைவருக்கு வருகை தந்தபோது, நான் அவரிடம் சொன்னேன், திபெத்தின் கலாச்சாரத்திற்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நாங்கள் எதிர்க்கிறோம் என்ற. நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும், நீங்கள் திபெத் சென்று சீனா செய்யும் அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் நீங்களே பாருங்கள் என்றார். நான் திபெத் செல்ல விசா பெற 25 வருடங்களாக முயற்சி செய்து வந்ததால், அவரது அந்த பேச்சுக்கு நன்றி சொன்னேன்.

நாங்கள் எங்கள் பிரதிநிதிகளுடன் திபெத் சென்றோம். பொட்டாலா அரண்மனைக்குச் சென்றோம். தலாய் லாமா வளர்ந்த அறையைப் பார்த்தோம். திபெத் மொழியின் பயன்பாட்டைக் குறைத்து அதன் கலாச்சாரத்தை அழிக்க சீனா முயல்கிறது.

நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத சில விஷயங்களை அவர்கள் முயற்சி செய்கிறார்கள். சீன மக்களுக்கு இதைப் பற்றி தெரியவில்லை. ஆனால் சீன அரசாங்கத்துக்கு எல்லாம் தெரியும். அவர்களுக்கு என்ன செய்தியைச் சொல்ல வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்காவின் சட்டத்துக்கு குடியரசுத்தலைவர் ஜோ பைடன் விரைவில் கையெழுத்திடுவார். அந்த சட்டம் சரியான செய்தியை வழங்கும்" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x