Published : 19 Jun 2024 01:41 PM
Last Updated : 19 Jun 2024 01:41 PM

ஜூன் மாதத்தில் சராசரியை விட 20% குறைவாக பெய்த பருவமழை: இந்திய வானிலை மையம்

கேரளாவில் உள்ள மலம்புழா அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தென்பட்ட மேகங்கள். புகைப்படம்: கேகே முஸ்தபா

புதுடெல்லி: நடப்பாண்டில் பருவமழையின் ஜூன் மாத மழைப்பொழிவு சராசரியை விட 20% குறைவாக பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் ஜூன் 1 முதல் 18 வரை பருவமழையானது இந்தியாவில் 64.5 மிமீ பெய்துள்ளது. இது நீண்டகால சராசரியான 80.6 மிமீ விட 20% குறைவு என்றும், ஜூன் 12 - 18ம் தேதிக்கு இடையில் மழைப்பொழிவு குறைந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜூன் 1 முதல், வடமேற்கு இந்தியாவில் 10.2 மிமீ (இயல்பை விட 70% குறைவு) மழைப்பொழிவும், மத்திய இந்தியாவில் 50.5 மிமீ (இயல்பை விட 31% குறைவு) மழைப்பொழிவும், தென் தீபகற்பத்தில் 106.6 மிமீ (இயல்பை விட 16% அதிகம்) மழைப்பொழிவும் மற்றும் கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் 146.7 மிமீ (இயல்பை விட 15% குறைவு) மழைப்பொழிவும் பதிவாகியுள்ளது.

நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே ரீமெல் புயல் வீசியது. தொடர்ந்து வழக்கத்துக்கு மாறாக ஒருநாள் முன்னதாகவே கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஜூன் 12க்குள், கர்நாடகா, கோவா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் மகாராஷ்டிராமாநிலத்தின் சில பகுதிகள், ஆகிய மாநிலங்கள் முழுவதும் பருவமழை தீவிரமடைந்தது. ஆனால், ஜூன் 12க்கு பிறகு பருவமழை முன்னேறவில்லை என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

ஜூன் மாதத்தில் மழைப்பொழிவு குறைவாக இருந்தாலும், மொத்தமாக நான்கு மாத பருவமழைக் காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) இயல்பை விட அதிகமாக மழை பொழிவு இருக்கும் என்றும் இந்த நான்கு மாதங்களில் சராசரி மழைப்பொழிவான 87 செமீ என்பதை தாண்டி 106% மழைப்பொழிவு இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஒடிசா, கடலோர ஆந்திரரா, வடமேற்கு வங்காள விரிகுடா, பிஹார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் அடுத்த 3-4 நாட்களில் பருவமழை மேலும் தீவிரமடைய சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x