Published : 19 Jun 2024 11:26 AM
Last Updated : 19 Jun 2024 11:26 AM

நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

மோடி

புதுடெல்லி: பிஹார் மாநிலம் ராஜ்கிரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நாளந்தா பல்கலைக்கழ புதிய வளாகம் திறப்பு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “ நமது கல்வித் துறைக்கு இது மிகவும் சிறப்பான நாள். நாளந்தா பல்கலைக்கழகம் நமது புகழ்பெற்ற கடந்த காலத்துடன் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளது. இளைஞர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இந்தப் பல்கலைக்கழகம் நிச்சயமாக நீண்ட தூரம் செல்லும்” எனப் பதிவிட்டுள்ளார்.

பிஹாரில் கடந்த 5ஆம் நூற்றாண்டில் சர்வதேச நாட்டு அறிஞர்களின் பங்களிப்புகளோடு உருவாக்கப்பட்டது நாளந்தா பல்கலைகழகம். சுமார் 800 ஆண்டுகள் பன்னாட்டு அறிஞர்களின் நூல்கள், ஆய்வுகளோடு சிறப்பாக செயல்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம் 12 ஆம் நூற்றாண்டு படையெடுப்போடு அழிக்கப்பட்டது. 1600 ஆண்டுகள் பழமையான இந்த நாளந்தா பல்கலைக்கழகம் தற்போது புதியதாக கட்டப்பட்டு இன்று திறக்கப்பட்டது.

இந்த புதிய வளாகம் நாளந்தாவின் பழங்கால இடிபாடுகள் உள்ள இடத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த புதிய வளாகத்துக்கு உள்ளே சோலார் மின் உற்பத்தி, குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு பசுமை வளாகமாக அமைக்கப்பட்டுள்ளது. நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தின் மதிப்பு ரூ.1700 கோடி ஆகும்.

இந்த புதிய வளாகத்தை பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் 17 நாடுகளின் தூதர்கள் கலந்து கொண்டனர். அதோடு நாளந்தாவின் பழங்கால இடிபாடுகளையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். பழங்கால நாளந்தா பல்கலைக்கழகத்தின் இடிபாடுகள் கடந்த 2016-ம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x