Published : 19 Jun 2024 05:38 AM
Last Updated : 19 Jun 2024 05:38 AM

விசாகப்பட்டினத்தில் அரசு பணம் ரூ.500 கோடியில் ஜெகன் கட்டிய சொகுசு பங்களாக்கள்: ரூ.1 கோடி செலவில் நவீன கழிவறை

விசாகப்பட்டினம்: ஜெகன் ஆட்சியில் விசாகப்பட்டினத்தின் ரிஷிகொண்டா மலைப் பகுதியில், அரசுப் பணம் ரூ. 500 கோடி செலவில் 7 சொகுசு பங்களாக்களை ரகசியமாக கட்டியுள்ளனர். இதில் ஒவ்வொரு கழிவறையும் ரூ.1 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டி விசாகப்பட்டினத்தை தலைநகரமாக்க முயற்சித்தார். இதனால், அப்போதைய அமைச்சர் ரோஜாவின் தலைமையில், சுற்றுலா வளர்ச்சி கழகம்சார்பில், விசாகப்பட்டினத்தில் உள்ள ரிஷிகொண்டா எனும் இடத்தில் இருந்த மிக அழகான மலையின் ஒருபுறம் தரைமட்டமாக்கப்பட்டது. இதனை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால், இங்கு சுற்றுலாவுக்கான கட்டிடங்கள் மட்டுமே கட்டப்படுகிறது என அப்போது அமைச்சராக இருந்த ரோஜா அறிவித்தார். விசாகப்பட்டினம் தலைநகராக அறிவித்ததும், அங்கு ஜெகன் தங்குவதற்கு சொகுசு பங்களா மிகவும் ரகசியமாக கட்டப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக இங்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை. தெலுங்குதேசம் ஆட்சி வந்ததும் முன்னாள் அமைச்சர் கண்டா ஸ்ரீநிவாச ராவ், செய்தியாளர்களை அழைத்து கொண்டு அந்த சொகுசு பங்களாக்களை சுற்றி பார்க்க சென்றார். அங்கு மொத்தம் 7 சொகுசு பங்களாக்கள் அருகருகே கட்டப்பட்டுள்ளன. ரூ.500 கோடிக்கும் மேல் மக்கள்பணத்தை செலவு செய்துள்ளனர். இங்கு ஒவ்வொரு அறையிலும் டோட்டோ பிராண்ட் கம்மோடுகள் (பேசின்கள்) அமைக்கப்பட்டுள்ளன. இதன் ஒன்றின் விலை மட்டும் ரூ. 9 லட்சம்முதல் ரூ.15.5 லட்சம் வரை உள்ளது.

கழிவறையில் குளிக்கும் டப்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் விலை குறைந்த பட்சம் ரூ. 12 லட்சம் என கூறப்படுகிறது. கழிவறையில் ஏசி வசதியும் உள்ளது. குளிர்காலத்தில் ஹீட்டர் வசதியும் உள்ளது. இவை சீதோஷ்ண நிலைக்கேற்ப தானாகவே இயங்கும் தன்மை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கழிவறைக்கும் ரூ.1 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கழிவறையும் 480 சதுர அடியில் கட்டியுள்ளனர்.

இங்கு கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு பங்களாவும் ஆச்சரியபட வைக்கிறது. இதில் உள்ளநாற்காலிகள், டேபிள்கள், கட்டில், மெத்தைகள், சினிமா அரங்கு, நீச்சல் குளம் என பார்ப்போரை வியக்க வைக்கின்றன. ஒவ்வொரு மின்விசிறியும் ரூ.7 லட்சம் வரை மதிப்பு கொண்டவை என கூறப்படுகிறது.

ஜெகன் தம்பதியினருக்கு ஒரு பங்களாவும், இரண்டு மகள்களுக்காக 2 பங்களாக்களும் கட்டப்பட்டுள்ளன. தொழில் தொடங்கவெளிநாட்டிலிருந்து வரும் முக்கிய நபர்களுக்கு, மீதமுள்ள பங்களாக்கள் என மொத்தம் 7 பங்களாக்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றின் வீடியோக்களும், புகைப்படங்களும் தற்போது ஆந்திர மாநிலத்தில் வைரல் ஆகி வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x