Published : 19 Jun 2024 06:21 AM
Last Updated : 19 Jun 2024 06:21 AM
புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் பக்ரீத் பண்டிகை மீண்டும் அமைதியுடன் முடிந்ததாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதற்கு அவர், சாலைகளில் தொழுகை இல்லை, தடை செய்யப்பட்ட விலங்குகள் பலியிடப்படவில்லை எனக் காரணம் கூறியுள்ளார்.
நாடு முழுவதிலும் முஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகை, நேற்று முன்தினம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்நாளில் மசூதிகளில் சிறப்பு தொழுகைக்காக முஸ்லிம்கள் நிரம்பி வழிவது வழக்கம். இதன் காரணமாக அவர்கள் பலசமயம் மசூதிக்கு வெளியே சாலைகளிலும் தொழுகை நடத்தும் நிலை ஏற்படுவது உண்டு. இதேபோன்ற சிறப்பு தொழுகை, முஸ்லிம்களின் மற்றொரு முக்கியபண்டிகையான ரம்ஜான் அன்றும்நடத்தப்படுவது உண்டு. இதனால்,அந்த சாலைகளில் சிறிது நேரம்போக்குவரத்து பாதிக்கப்படுவதாகப் புகார்கள் எழுவது உண்டு.
இதுபோன்ற புகார்கள் 2014-ல் மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி வந்தது முதல் வட மாநிலங்களில் எழத் துவங்கின. உ.பி.யிலும் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இவை சிக்கலாக அதிகரித்து வந்தன. இதனால் சில சமயம் உருவான மோதல்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளும் எழுந்தன.
இதையடுத்து, இதை தடுத்து நிறுத்த இதுபோல், சாலை ஓரங்களில் எந்த காரணம் கொண்டும் தொழுகை நடத்தக் கூடாது எனகண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இந்த உத்தரவினால், உ.பி. முஸ்லிம்கள் தங்கள் பகுதியில் உள்ள பெரிய குடியிருப்புகளிலும் தொழுகைகள் நடத்தி சமாளிக்கத் துவங்கினர்.
இந்த வகையில், தற்போது முடிந்த பக்ரீத் பண்டிகையிலும் தமது அரசின் உத்தரவு முறையாக கடைபிடிக்கப்பட்டதாக அதன் முதல்வர் யோகி மீண்டும் பெரு மிதம் கொண்டுள்ளார்.
இதுகுறித்து உ.பி. முதல்வர் யோகி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘ஈத்-உல்-அஸா எனும் பக்ரீத் பண்டிகை கொண்டாடுவதில் உ.பி. இந்தநாட்டுக்கே மீண்டும் முன்னுதாரணமாகி உள்ளது. இந்த வருடமும் பக்ரீத் சிறப்பு தொழுகை சாலைகளில் நடத்தப்படவில்லை.
இதனால், எந்தவிதமானப் போக்குவரத்து தடையும் ஏற்படவில்லை. தடை செய்யப்பட்ட விலங்குகள் பலியிடப்படவில்லை. இதன் மீதான எனது வேண்டுகோளுக்கு முஸ்லிம்கள் ஆதரவளித்தனர்.
இதன் பலன், பக்ரீத் தொழுகை அதற்கான மசூதிகளிலும், ஈத்கா மைதானங்களிலும், பாரம்பரிய இடங்களிலும் நடைபெற்றன. மசூதி, ஈத்காக்களில் இருந்த இடப்பற்றாக்குறையை சமாளிக்க ஷிப்ட் முறையில் தொழுகைகள் நடத்தி சமாளிக்கப்பட்டன. இதுபோன்ற நாட்களில் இதற்குமுன் தேவையற்ற சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன.
அதேசமயம், பலமானப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மாநிலம் முழுவதிலும் செய்யப்பட்டிருந்தன. பதற்றமான பகுதிகளில் டிரோன்கண்காணிப்புகள், பொதுமக்களின் நம்பிக்கையை பெற அதிகபோலீஸ் படைகள் அமர்த்தியதுடன் அவர்களது அணிவகுப்புகள் ஒருநாள் முன்னதாக நடத்தப்பட்டன’ எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT