Published : 01 May 2018 09:10 AM
Last Updated : 01 May 2018 09:10 AM
அ
ரசினால் நீதி மறுக்கப்படும்போது ஏழை குடிமக்கள் நாடும் இடம் நீதிமன்றங்கள். அத்தகைய நீதித்துறையின் உயர் அமைப்பே அரசின் பாதுகாப்பைத்தான் நாடி நிற்கிறது என்றால் நீதித்துறை மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வலுப்படும்? கடந்த வாரம் மத்திய அரசு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஆதரவாக வரிந்து கட்டிக்கொண்டு வந்தது.
இதோ இன்னொரு காட்சி; உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு தேர்ந்தெடுத்த நீதிபதி நியமனங்களுக்கான பட்டியலிலிருந்து ஒருவரை ஏற்றுக்கொண்டு, இன்னொருவரை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கடிதமும் எழுதினார் மத்திய சட்ட அமைச்சர். அரசின் நிராகரிப்புக்குக் காரணம் கேரளாவை பிரதிநிதிப்படுத்த ஏற்கெனவே ஒருவர் இருக்கிறார், மற்றும் பரிந்துரைக்கப்படும் நீதிபதியைவிட பணிமூப்பு உள்ளவர்கள் பலர் வரிசையில் உள்ளனர் என்பதாகும். இந்த நிராகரிப்பு ஏற்கும்படியாக இல்லை என்றாலும், இதன்மூலம் மக்களவை யில் தங்களுக்குப் பெரும்பான்மை வலு இருப்பதை நீதிபதிகளுக்கு மறைமுகமாக நினைவூட்டுகிறது மத்திய அரசு!
பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் ஒருவரையொருவர் கட்டோடு பிடிக்காது என்றாலும் நீதித்துறையை அடக்கி வைப்பதில் ஒன்று சேர்ந்துள்ளனர். நாடாளுமன்றத்தில் ஒருமித்த உணர்வோடு நிறைவேற்றப்படாவிட்டாலும் மின்னல் வேகத்தில் நிறைவேற்றப்பட்டதுதான் 'தேசிய நீதித்துறை நியமன ஆணையம்’ பற்றிய மசோதா. இது அரசியல் சட்டத்துக்கே முரணானது என்று கூறி அதைவிட வேகமாக இதைச் செல்லாததாக்கியது உச்ச நீதிமன்றம். காங்கிரஸும் பாஜகவும் பொது எதிரியான நீதித்துறையின் மீது வைத்த கண்களை எடுக்கவில்லை. நீதிபதிகள் நியமனத்தை அரசின் கையில் கொடுத்துவிட்டு, அதற்குக் காலம் பூராவும் ‘நன்றிக் கடன்’ பட்டுக்கொண்டிருக்க முடியாது என்று கூறித்தான் அந்த ஆணையத்தை 4-1 என்ற தீர்ப்பில் நிராகரித்தது உச்ச நீதிமன்றம். அந்த ஆணையம் இல்லாமலேயே இப்போது அரசின் தயவை நாடி நிற்க வேண்டிய நிலைக்கு வந்திருப்பதும் அதே நீதித்துறைதான்!
முக்கியமான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகளை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி நியமிக்கும் விதத்தைக் கேள்வி கேட்கின்றனர் இதர மூத்த நான்கு நீதிபதிகள். நீதிபதி லோயா மரணம் தொடர்பாகவும், மருத்துவக் கல்லூரி ஊழல் வழக்கு தொடர்பாகவும் நீதிபதிகள் மீதான லஞ்சப் புகார்கள் குறித்து கேள்வி கேட்கின்றனர் ஊழல்களுக்கு எதிராகத் தீவிரமாகச் செயல்படும் வழக்கறிஞர்கள்; காங்கிரஸ் கட்சியோ பிற எதிர்க்கட்சிகளை சேர்த்துக்கொண்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை, பதவியிலிருந்து அகற்றும் தீர்மானத்துக்கான முன்மொழிவைக் கொடுத்துவிட்டுக் காத்துக் கொண்டிருக்கிறது. ஆளும் பாஜகவோ உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஆதரவான நிலையை எடுத்திருக்கிறது.
நீதிபதிகள் குழு தேர்ந்தெடுத்தவர்களை அரசு ஒப்புதல் அளித்து நியமிப்பதில் கால தாமதம் ஆவது வழக்கமானதுதான்; ஆனால் இப்போது உயர் நீதிமன்ற நீதிபதியின் பதவிக்காலம் மாற்றப்படுகிறது; நீதிபதி கே.எம். ஜோசப்பை நியமிக்க வேண்டும் என்ற பரிந்துரையை ‘மறுபரிசீலனை செய்யுமாறு’ நீதிபதிகள் குழுவுக்கே அரசு துணிச்சலாகத் திருப்பி அனுப்பியிருக்கிறது. ‘பணிமூப்பெல்லாம் பார்க்க வேண்டாம், கே.எம். ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக்குங்கள்’ என்று நீதிபதிகள் குழு உத்தரவிட்டால், உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பதவி மூப்பின் அடிப்படையில் நியமனம் பெற வேண்டிய நீதிபதி ரஞ்சன் கோகோயை மத்திய அரசும் புறக்கணிக்கும்.
ஏராளமான முக்கிய வழக்குகள் தேங்கிக் கிடக்கும்போது, ஊடகங்களில் பிரபலமாவதற்காக பொது நலன் கோரும் மனுக்கள் மட்டும் உடனுக்குடன் விசாரிக்கப்படுவது மக்களால் கவனிக்கப்படாமல் இல்லை. ‘தேசிய நீதித்துறை நியமன ஆணையம்’ உடனடியாக நிராகரிக்கப்பட்டதும் அப்படித்தான் பார்க்கப்படுகிறது; நீதிபதிகள் தங்களுக்கு ஏதாவது ஒரு இடையூறு அல்லது அச்சுறுத்தல் என்றால் மின்னல் வேகத்தில் செயல்பட்டு விடுகின்றனர் என்றே அதைப் பார்க்கின்றனர். நீதிபதிகளும் நீதித்துறை வல்லுநர்களும் ஒற்றுமையாக நின்று நீதித்துறையை அரசின் ஆதிக்கத்திலிருந்து காப்பாற்ற வேண்டும். அரசுக்குக் கட்டுப்பட்டதாக நீதித்துறை இருக்க வேண்டும் என்று இந்திரா காந்தி ஆசைப்பட்ட காலத்துக்குப் பிறகு, அந்த அமைப்புக்கு மிகப் பெரிய ஆபத்து நேரிட்டுள்ள காலம் இது.
இப்போது நீதித்துறை தோற்றால் அதன் விளைவாக மக்கள்தான் பெரும் பாதிப்பை அடைவார்கள். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்த அமைப்புக்காகவும் நீதிபதிகளை நியமிக்கும் குழுவுக்காகவும் அவர் அரசுடன் போராடியாக வேண்டும். அவருடைய சகோதர நீதிபதிகள் 1973-77 வரையிலான காலத்தில் என்ன நடந்தது என்பதை நினைவுகூர்ந்தால் போதுமானது; இந்திரா காந்தி பணிமூப்பை மனதில் கொள்ளாமல் யாரையெல்லாம் நீதிபதியாக நியமித்தாரோ அவர்களில் ஒருவர்கூட நம்முடைய நினைவில் இப்போது இல்லை. ஆனால் அவருடைய எதேச்சாதிகாரத்தை எதிர்த்தும் நீதித்துறையின் சுதந்திரத்தை வலியுறுத்தியும் நீதிபதி பதவியை யாரெல்லாம் உதறித் தள்ளினார்களோ அந்தப் பெருமக்கள் அனைவரும் நன்றியுடனும் பெருமிதத்துடனும் நினைவுகூரப்படுகின்றனர். இப்போதைய நீதிபதிகள் சிலருக்கும் கூட அந்தச் சோதனைகள் காத்திருக்கின்றன.
சேகர் குப்தா, ‘தி பிரின்ட்’ தலைவர்,
முதன்மை ஆசிரியர்
தமிழில்: ஜூரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT