Published : 18 Jun 2024 06:58 PM
Last Updated : 18 Jun 2024 06:58 PM

ஆங்கில வழிப் பள்ளிகள் மீதான மோகம் என்பது தற்கொலைக்கு நிகரானது: என்சிஇஆர்டி தலைவர்

புதுடெல்லி: ஆங்கில வழிப் பள்ளிகள் மீதான பெற்றோரின் மோகம் என்பது தற்கொலைக்கு நிகரானது என்று தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) தலைவர் டி.பி. சக்லானி தெரிவித்துள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவன செய்தி ஆசிரியர்கள் மத்தியில் உரையாடிய டி.பி. சக்லானி, "பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் போதுமான அளவில் இல்லாதபோதிலும், ஆங்கில வழிப் பள்ளிகள் மீதான பெற்றோரின் மோகம் என்பது தற்கொலைக்கு நிகரானது. அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுகிறது. ஆங்கிலத்தில் உள்ள பாடங்களை திணிக்கும் பழக்கம் குழந்தைகளிடையே அறிவு இழப்புக்கு வழிவகுக்கிறது. அதோடு, அவர்களின் வேர்கள் மற்றும் கலாச்சாரத்திலிருந்து அவர்களை விலக்குகிறது.

போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் குறிப்பாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாவிட்டாலும், ஆங்கில வழி பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்புவதையே பெற்றோர் தேர்வு செய்கிறார்கள். இது தற்கொலைக்கு நிகரானது. அதனால்தான் புதிய தேசிய கல்விக் கொள்கை, தாய்மொழி வழி கற்றலை வலியுறுத்துகிறது.

தாய்மொழி வழி கற்றல் ஏன் ஆழமாக இருக்க வேண்டும்? ஏனென்றால், நமது சொந்த தாயை, நமது வேர்களை புரிந்துகொள்ளாதபோது மற்றதை எப்படி புரிந்துகொள்ள முடியும்? பன்மொழி அணுகுமுறை என்பது எந்த மொழியிலும் அனைத்து பாடங்களையும் கற்பிப்பது அல்ல. அது முடிவுக்கு வர வேண்டும். மாறாக, பல மொழிகளை மொழி வழியாக கற்க வேண்டும்.

மத்திய கல்வி அமைச்சரின் முன் முயற்சி காரணமாக ஒடிசாவின் இரண்டு பழங்குடி மொழிகளில் ஆரம்பக் கல்விக்கான பாட புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, படங்கள், கதைகள், பாடல்கள் மூலம் கற்பிக்கப்படுகிறது. இதன்மூலம், அந்த மாணவர்களின் பேசும் திறன், கற்கும் திறன், கற்றல் விளைவுகள் மேம்பட்டுள்ளன. தற்போது நாங்கள் 121 மொழிகளில் ஆரம்பக் கல்வி பாடத்திட்டங்களை உருவாக்கி வருகிறோம். அவை இந்த ஆண்டு தயாராகிவிடும். இந்த முயற்சி, பள்ளி செல்லும் குழந்தைகளை அவர்களின் வேர்களுடன் இணைக்க உதவும்.

நாம் ஆங்கிலத்தில் திணறத் தொடங்குவதால், அறிவு இழப்பு ஏற்படுகிறது. மொழி ஒரு செயல்படுத்தும் காரணியாக இருக்க வேண்டும். மாறாக, செயலிழக்க வைக்கக்கூடியதாக இருக்கக்கூடாது. இதுவரை நாம் முடக்கப்பட்டிருந்தோம். இப்போது பன்மொழிக் கல்வியின் மூலம் நாம் நம்மை செயல்படவைக்க முயல்கிறோம்” என தெரிவித்தார்.

2020-இல் அறிவிக்கப்பட்ட புதிய தேசியக் கல்விக் கொள்கை (NEP), சாத்தியமான இடங்களில் எல்லாம் குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு வரையிலாவது தாய்மொழியில், உள்ளூர் மொழியில், மாநில மொழியில் பயிற்றுவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. தாய்மொழியில் கற்பிப்பது 8-ம் வகுப்பு வரையிலும், அதற்கும் மேலும் இருக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைத்துள்ளது. அதன்பிறகும், முடிந்தவரை தாய்மொழி கற்றலை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அது பரிந்துரைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x