Published : 18 Jun 2024 05:36 PM
Last Updated : 18 Jun 2024 05:36 PM

“பிரியங்கா எம்.பி ஆன பிறகு நான் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்” - ராபர்ட் வதேரா

புதுடெல்லி: “பிரியங்கா காந்தி எம்.பி ஆன பிறகு நான் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்” என அவரது கணவரும், தொழிலதிபருமான ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ராபர்ட் வதேரா, "பிரியங்கா வயநாட்டில் போட்டியிடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அங்கும் அவர் கடுமையாக உழைப்பார். வயநாட்டு மக்கள் அவரை வெற்றிபெறச் செய்வார்கள் என்று நம்புகிறேன். நான் தீவிர அரசியலில் நுழைவது குறித்து என்னிடம் கேட்கப்படும் போதெல்லாம், பிரியங்கா எம்பி ஆன பிறகு நான் அதை பற்றி யோசிப்பேன் என்று கூறி வந்தேன்.

விவசாயிகள் நலன், வேலையில்லா திண்டாட்டம், பெண்கள் பாதுகாப்பு போன்ற பாஜக எழுப்பாத பிரச்சினைகளை பிரியங்கா நாடாளுமன்றத்தில் எழுப்புவார். அமேதி தொகுதியின் முன்னாள் எம்பி ஸ்மிருதி இரானி பெண்களுக்காக, பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்காக எதையும் செய்யவில்லை. ஆனால், பிரியங்கா நிச்சயமாக நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பார்.

காந்தி குடும்பத்துடனான பந்தம் தொடர வேண்டும் என்று அமேதி மற்றும் ரேபரேலி மக்கள் விரும்புகிறார்கள். கடந்தமுறை ஸ்மிருதி இரானிக்கு வாய்ப்பு அளித்ததன் மூலம் தவறு செய்துவிட்டதாக, அமேதி மக்கள் உணர்ந்துள்ளனர். ஸ்மிருதி இரானி தொகுதியின் வளர்ச்சிக்காக உழைக்கவில்லை. அமேதியில் கடந்த 40 ஆண்டுகளாக உழைத்த கிஷோரி லால்-ஐ அந்த தொகுதியில் களமிறக்க ராகுலும், பிரியங்காவும் எடுத்த முடிவு சரியானது. அந்த முடிவை எடுத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதை வரவேற்று வயநாடு காங்கிரஸ் கமிட்டி இன்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள காங்கிரஸ் தலைவர் வி.டி.சதீசன், "காந்தி - நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது கேரளா அன்பு கொண்டிருக்கிறது. ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி பெறுவார் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x