Published : 18 Jun 2024 03:13 PM
Last Updated : 18 Jun 2024 03:13 PM
புதுடெல்லி: நீட் விவகாரத்தில் பிரதமர் மோடி வழக்கம்போல் மவுனம் சாதிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த ஆண்டு நடத்தப்பட்ட இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிந்ததை எதிர்த்தும், முறைகேடுகள் நடந்ததை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “நீட் நுழைவுத் தேர்வில் 0.001% அலட்சியம்கூட இருக்கக்கூடாது. அதுபோன்ற அலட்சியம் இருப்பதாக தெரியவந்தால் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும்” என்று தெரிவித்தனர். மேலும், வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பாக நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையும், மத்திய அரசும் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 8ம் தேதிக்க ஒத்திவைத்தனர்.
இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “நீட் தேர்வு ஊழலால் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி வழக்கம் போல் மவுனம் சாதிக்கிறார். பிஹார், குஜராத், ஹரியாணா மாநிலங்களில் நடந்துள்ள கைதுகள், நீட் தேர்வு செயல்பாட்டில் திட்டமிட்ட ஊழல் நடந்துள்ளதைத் தெளிவாகக் காட்டுகிறது. பாஜக ஆளும் இந்த மாநிலங்கள்தான் வினாத்தாள் கசிவின் மையமாக மாறியுள்ளன.
வினாத்தாள் கசிவதைத் தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்படும் என்றும் அதன் மூலம் இளைஞர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என்றும் நாங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளித்துள்ளோம். எதிர்க்கட்சி என்ற வகையில் எங்களது பொறுப்பை நிறைவேற்றி, நாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் குரல்களை தெருக்களில் இருந்து நாடாளுமன்றம் வரை வலுவாக எழுப்பவும், வினாத்தாள் கசிவதைத் தடுக்க கடுமையான சட்டங்களை உருவாக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
வழக்கு தொடர்வதற்கான காரணம்: இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை, மே 5ம் தேதி நடத்தியது. நாடு முழுவதும் 4,750 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் 4ம் தேதியே முடிவுகள் வெளியாகின.
முன் எப்போதும் இல்லாத அளவு இந்த முறை 67 மாணவர்கள் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண்ணை பெற்றிருந்தனர். ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 6 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். இது முறைகேடு நடத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என்ற சந்தேகத்தை எழுப்பியது.
இதையடுத்து, நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை உச்ச நீதிமன்ற விடுமுறை கால இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அஹ்ஸானுதீன் அமானுல்லா இணைந்து விசாரித்தனர்.
தேர்வை ரத்து செய்வது, மறுதேர்வு மற்றும் கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண்களை ரத்து செய்வது குறித்த மூன்று மனுக்கள் விசாரிக்கப்பட்டன.
தேசிய தேர்வு முகமை பதில்: தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நரேஷ் கவுசிக், “கருணை மதிப்பெண்கள் பெற்ற 1,563 பேருக்கு மறுதேர்வு நடத்தப்படும். மறுதேர்வு ஜூன் 23-ம் தேதியும், அதன் முடிவுகள் 30-ம் தேதியும் வெளியாகும்” என்று தெரிவித்தார். அப்போது, கலந்தாய்வு பணிகள் பாதிக்கப்படாத வகையில் மறுதேர்வை விரைந்து நடத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT