Published : 18 Jun 2024 12:46 PM
Last Updated : 18 Jun 2024 12:46 PM
புதுடெல்லி: நீட் தேர்வை நடத்துவதில் 0.001% அலட்சியம்கூட இருக்கக்கூடாது என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டு நடத்தப்பட்ட இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிந்ததை எதிர்த்தும், முறைகேடுகள் நடந்ததை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “நீட் நுழைவுத் தேர்வில் 0.001% அலட்சியம்கூட இருக்கக்கூடாது. அதுபோன்ற அலட்சியம் இருப்பதாக தெரியவந்தால் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பாக நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை மற்றம் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தினேஷ் ஜோத்வானி, “இன்று நீதிபதிகள் மிகவும் தெளிவாக தேசிய தேர்வு முகமைக்கு சொல்லி இருக்கிறார்கள். நீட் தேர்வு எழுதும் மாணவர்களை உங்களின் கிளையன்ட் என்று நினைக்காதீர்கள், அவர்களிடம் விரோத போக்கும் வேண்டாம், இது மாணவர்கள் மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு இடையேயான மோதல் அல்ல என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தேசிய தேர்வு முகமை அலுவலர்களிடம் 0.001% அலட்சியம் இருந்தாலும் அதன் மீது கவனம் செலுத்தி அதற்கு தீர்வு காணுங்கள் என்று நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து, இந்த வழக்கில் முக்கிய மனு விசாரணைக்கு வர உள்ள ஜூலை 8ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர். இன்றைய தேதியில், தேசிய தேர்வு முகமைக்கு எந்த வாய்ப்பையும் நீதிமன்றம் வழங்கவில்லை. பதில் மனு தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு உதவ வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது" என தெரிவித்தார்.
வழக்கு தொடர்வதற்கான காரணம்: இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை, மே 5ம் தேதி நடத்தியது. நாடு முழுவதும் 4,750 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் 4ம் தேதியே முடிவுகள் வெளியாகின.
முன் எப்போதும் இல்லாத அளவு இந்த முறை 67 மாணவர்கள் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண்ணை பெற்றிருந்தனர். ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 6 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். இது முறைகேடு நடத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என்ற சந்தேகத்தை எழுப்பியது.
இதையடுத்து, நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை உச்ச நீதிமன்ற விடுமுறை கால இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அஹ்ஸானுதீன் அமானுல்லா இணைந்து விசாரித்தனர்.
தேர்வை ரத்து செய்வது, மறுதேர்வு மற்றும் கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண்களை ரத்து செய்வது குறித்த மூன்று மனுக்கள் விசாரிக்கப்பட்டன.
தேசிய தேர்வு முகமை பதில்: தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நரேஷ் கவுசிக், “கருணை மதிப்பெண்கள் பெற்ற 1,563 பேருக்கு மறுதேர்வு நடத்தப்படும். மறுதேர்வு ஜூன் 23-ம் தேதியும், அதன் முடிவுகள் 30-ம் தேதியும் வெளியாகும்” என்று தெரிவித்தார். அப்போது, கலந்தாய்வு பணிகள் பாதிக்கப்படாத வகையில் மறுதேர்வை விரைந்து நடத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மத்திய கல்வி அமைச்சர் விளக்கம்: இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “நீட் தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. வினாத்தாள் கசியவில்லை. வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை இந்த ஆண்டு 24 லட்சம் மாணவர்கள் எழுதி இருக்கிறார்கள். இதில், சுமார் 1,500 மாணவர்கள் தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. நீதிமன்றத்துக்கு பதில் அளிக்க அரசு தயாராக இருக்கிறது. இந்த குறிப்பிட்ட விஷயத்தைக் கருத்தில் கொண்டு கல்வியாளர்களைக் கொண்ட குழு ஒன்றை அரசு அமைத்திருக்கிறது.
நீட் தேர்வில் பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது போன்ற ஒரு சூழல் உருவாக்கப்படுகிறது. தேசிய தேர்வு முகமை 3 முக்கிய தேர்வுகளை நடத்துகிறது. நீட், ஜேஇஇ, க்யூட் ஆகிய தேர்வுகளை அது வெற்றிகரமாக நடத்தி வருகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் தவறு நடந்திருந்தால் அதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் நீதி வழங்குவதில் தேசிய தேர்வு முகமை உறுதியாக இருக்கிறது என்பதை நான் அவர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். அந்த 1,560 மாணவர்களுக்கும் நீதிமன்றம் கூறும் முறைப்படி தேர்வு நடத்தப்படும். அதற்காக, கல்வியாளர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் ஏற்போம்” எனத் தெரிவித்திருந்தார்.
காங்கிரஸின் கண்டனம்: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகோய், “நீட் தேர்வு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை விஷயத்தில் பாஜக அரசின் அணுகுமுறை பொறுப்பற்றதாகவும், உணர்வற்றதாகவும் உள்ளது. சுமார் 24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள இந்த முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.
பல்வேறு பயிற்சி மையங்கள் கொடுத்த வாக்குறுதிகளால், சாதாரண குடும்பங்கள் ரூ.30 லட்சம் வரை செலவழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு மண்டியிட்டு மாணவர்களுக்கு பொறுப்புகூற வைக்கும் அளவுக்கு இம்முறை இண்டியா கூட்டணி வலிமையாக உள்ளது. நீட் தேர்வு முடிவுகள் ஏன் ஜூன் 4-ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதற்கு பதில் வேண்டும். ஆனால், அரசு, விவாதத்தை தவிர்க்க விரும்புகிறது” என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT