Published : 18 Jun 2024 10:02 AM
Last Updated : 18 Jun 2024 10:02 AM
காசியாபாத்: வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு ரேபரேலி தொகுதியை தக்கவைத்துக் கொள்ள ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினரும், உத்தர பிரதேசத்தை சேர்ந்தவருமான ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம் கருத்து தெரிவித்துள்ளார்.
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் உத்தரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டி விடுத்த கோரிக்கைக்கு கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவரை கடந்த பிப்ரவரி மாதம், கட்சியில் இருந்து நீக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்தி மிகவும் பிரபலமானவர். அவருக்கு தான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்திருக்க வேண்டும். மக்களவை இடைத்தேர்தலில் அவரை போட்டியிட செய்துள்ளது அவரது அந்தஸ்தை மட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள நகர்வு.
இருந்தாலும் புதிய இன்னிங்ஸை தொடங்க உள்ள அவருக்கு எனது வாழ்த்துகள். ஆனால், அவரை வயநாடு தொகுதியில் போட்டியிட செய்துள்ளதன் மூலம் காங்கிரஸ் கட்சி ஒன்றை உறுதி செய்துள்ளது. அது என்னவென்றால் காங்கிரஸ் கட்சி, இந்துக்களை நம்பவில்லை என்பதுதான். அவர்கள் இந்துக்களை நம்பி இருந்தால் பிரியங்கா காந்தி வேறொரு தொகுதியில் தான் போட்டியிட்டிருக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT