Published : 18 Jun 2024 05:17 AM
Last Updated : 18 Jun 2024 05:17 AM

ரேபரேலி எம்.பி. பதவியை தக்க வைக்கிறார் ராகுல் காந்தி: வயநாட்டில் பிரியங்கா போட்டியிடுவதாக அறிவிப்பு

புதுடெல்லி: வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு ரேபரேலி தொகுதியை தக்கவைத்துக் கொள்ள ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய 2 தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் ஏதாவது ஒரு எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். எந்த தொகுதியை ராகுல் தக்கவைத்துக் கொள்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதுகுறித்து முடிவு செய்ய இன்றுதான் கடைசி நாள்.

இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில், அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்,பிரியங்கா மற்றும் கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளர்களிடம் கார்கே கூறியதாவது:

விதிமுறைகளின்படி, ஒரு தொகுதியில் மட்டுமே ராகுல்எம்.பி.யாக நீடிக்க முடியும். மற்றொரு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். எனவே, ரேபரேலி தொகுதியை ராகுல் காந்தி தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. ஏனெனில் அந்த தொகுதி நீண்ட காலமாக காந்தி குடும்பத்துக்கு மிகவும்நெருக்கமாக இருந்து வந்துள்ளது.

அதேநேரம் ராகுல் காந்தி மீதுஅன்பு வைத்துள்ள வயநாடு மக்கள்,அந்த தொகுதியை ராகுல் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் எனவிரும்புகின்றனர். விதிமுறைகளில் அதற்கு இடமில்லை. எனவே, நீண்ட ஆலோசனைக்கு பிறகு, வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் ராஜினாமா செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா போட்டியிட வும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இவ்வாறு கார்கே தெரிவித்தார்.

முதல்முறையாக போட்டி: இதன்மூலம் பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் போட்டியிட உள்ளார். இதுகுறித்து பிரியங்கா கூறும்போது, “ராகுல் ராஜினாமா செய்துவிட்டாரே என்று அப்பகுதி மக்கள் வருத்தப்படாத அளவுக்கு கடுமையாக பணியாற்றுவேன்” என்றார்.

இதுகுறித்து ராகுல் கூறும்போது, “என் மீது அன்பு செலுத்திய வயநாடு மக்களுக்கு நன்றி.தொடர்ந்து வயநாடு செல்வேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x