Published : 17 Jun 2024 03:08 PM
Last Updated : 17 Jun 2024 03:08 PM
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் பேருந்து மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையை மத்திய உள்துறை அமைச்சகம் தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) இன்று ஒப்படைத்தது.
ஜூன் 9-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் யாத்ரீகர்கள் பயணித்த பேருந்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். ரியாசியில் உள்ள சிவ் கோரி கோயிலுக்கு சென்றுவிட்டு கட்ரா நோக்கி யாத்ரீகர்கள் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பேருந்தை நோக்கி தீவிரவாதிகள் சுட்டனர். இதனால், பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயமடைந்தனர்.
இந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையானது தற்போது என்ஐஏ-விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிறு) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு நிலைமை மற்றும் அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின் மத்திய உள்துறை வசம் இருந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பான விசாரணை இன்று என்ஐஏ-விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ரியாசி மாவட்டத்தில் பேருந்து மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து தீவிரவாத சம்பவங்கள் அரங்கேறின. ஜூன் 11 அன்று, பதேர்வாவில் உள்ள சட்டர்கல்லாவில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதேபோல், ஜூன் 12 அன்று தோடா மாவட்டத்தின் காண்டோ பகுதியில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. இதில், 8 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு நிலைமைகளை ஆய்வு செய்யும் கூட்டம் நேற்று (ஜூன் 16) நடைபெற்றது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, உளவுத்துறை இயக்குநர் தபன் டேகா, சிஆர்பிஎஃப் இயக்குநர் ஜெனரல் அனிஷ் தயாள் சிங், பிஎஸ்எப் இயக்குநர் ஜெனரல் நிதின் அகர்வால், ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆர்.ஆர்.ஸ்வைன் என முக்கிய அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT