Published : 02 May 2018 07:42 AM
Last Updated : 02 May 2018 07:42 AM
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரிகளை கடந்து வெயில் வாட்டியெடுக்கிறது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் மட்டும் இந்த இரு மாநிலங்களில் வெயிலுக்கு 19 பேர் பலியாயினர்.
இந்த கோடை காலம் ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களையும் ஆட்டிப் படைக்கிறது. கோடை வெயில் காரணமாக ஆந்திர மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கடந்த ஆண்டை விட 3 முதல் 4 டிகிரி வரை அதிக வெயில் பதிவாகி வருகிறது.
குறிப்பாக கடப்பா, குண்டூர், அனந்தப்பூர், சித்தூர் ஆகிய ராயலசீமா பகுதிகளிலும், விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் ஆகிய கடலோர பகுதிகளிலும், கிருஷ்ணா, பிரகாசம், கோதாவரி ஆகிய ஆந்திரா பகுதிகளிலும் மிக அதிக அளவில் உஷ்ண நிலை மாறி வருகிறது.
இதன் காரணமாக முதியோர், குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோன்று, தெலங்கானா தலைநகரம் ஹைதாராபாத்திலும் வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிக வெயில் பதிவாகி வருவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். இதன் காரணமாக ஹைதராபாத்தை சுற்றி உள்ள மற்ற மாவட்டங்களில் கூடுதல் வெப்ப நிலை காணப்படுகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் தெலங்கானா மாநிலத்தில் 12 பேரும், ஆந்திராவில் 7 பேரும் வெயில் கொடுமை தாளாமல் பலியாகி உள்ளனர்.
இந்த இரு மாநிலங்களிலும் பல பகுதிகளில் சுட்டெரிக்கும் அனல் காற்று வீசி வருகிறது. எனவே, மதிய நேரத்தில் பொதுமக்கள் குறிப்பாக முதியோர் மற்றும் குழந்தைகள் வெளியே செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT