Published : 15 Jun 2024 05:20 PM
Last Updated : 15 Jun 2024 05:20 PM
ருத்ரபிரயாக் (உத்தராகண்ட்): ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ரிஷிகேஷ் - பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த டெம்போ ட்ராவலர், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்; 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
டெல்லியில் இருந்து 26 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று (ஜூன் 14) இரவு 11 மணி அளவில் சோப்தா நோக்கி புறப்பட்ட டெம்போ ட்ராவலர், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ரிஷிகேஷ் - பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 12 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தை அடுத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டதாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். மேலும் அவர், "காயமடைந்தவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
காயமடைந்தவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க மாநில அரசு உறுதிபூண்டிருக்கிறது. இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இந்த வேதனையைத் தாங்கும் சக்தியை அளிக்கவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய கடவுளை பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "உத்தராகண்ட்டின் ருத்ரபிரயாக்கில் நேரிட்ட விபத்து குறித்து கேள்விப்பட்டேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். உள்ளூர் நிர்வாகம் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்கள் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT