Published : 15 Jun 2024 12:34 PM
Last Updated : 15 Jun 2024 12:34 PM

“மோடி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்” - மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி: பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் மோடி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த மல்லிகார்ஜுன கார்கே, “தற்போதைய மத்திய அரசு சிறுபான்மை அரசு. இந்த அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம். இது இயல்பான ஒரு நிலைதான். மோடியின் இந்த அரசை மக்கள் சிறுபான்மை அரசாக ஆக்கி இருக்கிறார்கள். கூட்டணி அரசு குறித்து மோடியே பலமுறை விமர்சனங்களை வைத்திருக்கிறார். கூட்டணி அரசு என்பது கிச்சிடி அரசு என்றும், பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி அரசு என்பது எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்றும் அவர் கூறி இருக்கிறார். அதோடு, கூட்டணி அரசில் ஆட்சியாளர்களால் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றும் அவர் கூறி இருக்கிறார். இவையெல்லாம் அவர் கூறியவை. அவற்றையே நான் திரும்பச் சொல்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களை விட 32 இடங்கள் குறைவாக அக்கட்சி பெற்றுள்ளது. அதேநேரத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 16 எம்பிக்களைக் கொண்டுள்ள தெலுங்கு தேச கட்சியும், 12 எம்.பி.க்களைக் கொண்டுள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பதாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x