Published : 14 Jun 2024 01:32 PM
Last Updated : 14 Jun 2024 01:32 PM
புதுடெல்லி: "ஆணவம் கொண்டவர்கள் இந்த மக்களவைத் தேர்தலில் 241-ல் நிறுத்தப்பட்டுள்ளனர்" என்று ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் பாஜக கூட்டணியை சாடியுள்ளது கவனம் பெற்றுள்ளது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் 303 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக, 2024 தேர்தலில் 370 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்திருந்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களைக் கைப்பற்றும் என்றும் பாஜக கூறிவந்தது. இந்நிலையில், இந்த தேர்தலில் அக்கட்சி 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை எனும் நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது.
கடந்த 2014 முதல் நடைபெற்ற 3 மக்களவைத் தேர்தல்களில் இந்த தேர்தலில் மட்டுமே பாஜக பெரும்பான்மைக்கும் குறைவான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று (ஜூன் 13) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார், பாஜகவுக்கு தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து விமர்சித்துள்ளார்.
“ராமர் மீது பக்தி செலுத்தியவர்கள், படிப்படியாக ஆணவமடைந்தனர். அந்த கட்சி மிகப்பெரிய கட்சியாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர்களின் ஆணவம் காரணமாக ராமரால் அந்தக் கட்சி 241 இடங்களோடு தடுத்து நிறுத்தப்பட்டது” என்று இந்திரேஷ் குமார் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளையும் கடுமையாக விமர்சித்த இந்திரேஷ் குமார், “ராமர் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அனைவரும் 234 இடங்களோடு தடுத்து நிறுத்தப்பட்டனர். கடவுள் உண்மையான நீதியை வழங்கி இருக்கிறார். இது மகிழ்ச்சிக்குரியது” என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம், இண்டியா கூட்டணியைச் சேர்ந்த கட்சிகளை ராமர் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் என்று அவர் விமர்சித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், தேர்தலில் தலைவர்கள் மேற்கொண்ட பிரச்சாரங்கள் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். “கடந்த ஓராண்டாக மணிப்பூர் மக்கள் அமைதிக்காக காத்திருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக அந்த மாநிலம் அமைதியாகவே இருந்து வந்தது, ஆனால் திடீரென மீண்டும் துப்பாக்கி கலாச்சாரம் அங்கே தலைதூக்கியுள்ளது. மணிப்பூர் பிரச்சினையை முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக தீர்க்க வேண்டும். அங்கே வன்முறை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
பொருளாதாரம், பாதுகாப்பு, விளையாட்டு, கலாச்சாரம், தொழில்நுட்பம் என பல துறைகளில் நாம் முன்னேறி இருக்கிறோம். ஆனால் அதன் மூலம் எல்லா சவால்களையும் தாண்டிவிட்டோம் என்று அர்த்தமல்ல.
தேர்தல் என்பது ஒருமித்த கருத்தை உருவாக்கும் ஒரு நிகழ்வு. ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் ஒருவரையொருவர் வார்த்தைகளால் தாக்கிக் கொள்வது, தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது, பொய்யான செய்திகளை பரப்புவது ஆகியவை ஆரோக்கியமானதல்ல.
ஒவ்வொரு பிரச்சினைக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. ஒரு கட்சி ஒரு பக்கம் குறித்து பேசினால், எதிர்கட்சியினர் மற்றோரு பக்கம் குறித்து பேசவேண்டும். இதன் மூலமே நாம் சரியான முடிவை எட்ட முடியும். தேர்தல் பரபரப்பில் இருந்து விடுபட்டு நாடு எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகள் குறித்து நாம் சிந்திக்க வேண்டும்” என்று மோகன் பாகவத் பேசி இருந்தார்.
இந்நிலையில், மோகன் பாகவத்தின் கருத்தை ஒட்டி இந்திரேஷ் குமார் பேசி இருப்பது பாரதிய ஜனதா கட்சிக்கும் ஆர்எஸ்எஸ்-க்கும் இடையே பிரச்சினை தீவிரமடைந்து வருவதன் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT