Published : 14 Jun 2024 06:11 AM
Last Updated : 14 Jun 2024 06:11 AM
திருமலை: கடந்த 5 ஆண்டுகளில் ஜெகன்மோகன் ஆட்சியில் திருமலையின் புனிதம் கெட்டுவிட்டது. திருமலையின் புனிதத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என்.சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக ஆந்திர முதல்வராக நேற்று முன்தினம் பதவியேற்றார். இதையடுத்து அன்று இரவு சந்திரபாபு நாயுடு தனதுமனைவி புவனேஸ்வரி, மகன்லோகேஷ், மருமகள் பிராம்மனி,பேரன் தேவான்ஷ் ஆகியோருடன் விஜயவாடாவில் இருந்து திருப்பதிக்கு வந்தார். இரவு திருமலையில் தங்கினார். அப்போது இவர் தங்கியிருந்த அறைக்கு அருகே சாலையின் இருபுறமும் துணிகளால்மூடப்பட்டு, கடைகள் அடைக்கப்பட்டு, பக்தர்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதை சந்திரபாபு கவனித்தார்.
உடனே பாதுகாப்பு மற்றும் தேவஸ்தான அதிகாரிகளை அழைத்து, “இது ஜெகன் ஆட்சி அல்ல. உடனடியாக துணிகளை அகற்றுங்கள், திருமலையில் பக்தர்களை சுதந்திரமாக செல்ல அனுமதியுங்கள். இனி ஒருபோதும் இப்படி நடந்து கொள்ளாதீர்கள். அடைக்கப்பட்ட கடைகளை திறக்கச் சொல்லுங்கள்” என உத்தரவிட்டார். அதிகாரிகள் உடனே இந்த உத்தரவை அமல்படுத்தினர்.
இந்நிலையில், முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தார் நேற்று காலையில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். பிறகு ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் முதல்வருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.
இதையடுத்து சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் பேசும்போது, "கடந்த 2003-ல் இதே அலிபிரியில் என்னுடைய காரை குண்டுவைத்து தகர்க்க சதி நடந்தது. இதில் இருந்து என் உயிரை ஏழுமலையான் தான் காப்பாற்றினார்.
கடந்த 5 ஆண்டுகளில் ஜெகன்ஆட்சியில் திருமலையில் கஞ்சா,மது, சிகரெட், மாமிசம் போன்றவை விற்கப்பட்டுள்ளது. இதனால் திருமலையில் புனிதம் கெட்டு விட்டது. இனி அதுபோன்ற சம்பவங்கள் நடக்க கூடாது. திருமலையின் புனிதத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பேன்" என்றார்.
முதியோருக்கு ரூ.4 ஆயிரம்: சந்திரபாபு நாயுடு பதவியேற்றதும் முதல் கோப்பாக, ஆந்திராவில் காலியாக உள்ள 16,347அரசு ஆசிரியர் பணிக்கான இடங்களை நிரப்பும் கோப்பில் கையெழுத்திட்டார். அதைத் தொடர்ந்து கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘லேண்ட் டைட்டிலிங் ஆக்ட்’ எனும் சட்டத்தைரத்து செய்வதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். 3-வதாக, முதியோருக்கு மாதம் ரூ.4 ஆயிரம் உதவி தொகை வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT