Published : 13 Jun 2024 11:53 PM
Last Updated : 13 Jun 2024 11:53 PM

ஜம்மு - காஷ்மீரில் அனைத்து பள்ளிகளிலும் தேசிய கீதம் கட்டாயம்: புதிய உத்தரவு அமல்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தேசிய கீதத்துடன் காலை வகுப்புகளை தொடங்குமாறு அம்மாநில பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் அலோக் குமார் மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், சரியான வழிகாட்டுதல்களின்படி பள்ளிகளில் காலை அசெம்பிளி தேசிய கீதத்துடன் தொடங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “காலை அசெம்பிளி என்பது ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஆகியவற்றை வளர்ப்பதற்கான தளங்களாக செயல்படுகின்றன. ஜம்மு- காஷ்மீரின் பல பள்ளிகளில் இது போன்ற குறிப்பிடத்தக்க பாரம்பரியம் ஒரே மாதிரியாக மேற்கொள்ளப்படவில்லை” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிகளில் காலை அசெம்பிளியில் சிறப்பு விருந்தினர்களை அழைத்து சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பள்ளிக்கல்வித் துறை பரிந்துரைத்துள்ளது.

பள்ளிகளில் 20 நிமிடங்களுக்கு காலை அசெம்பிளி நீடிக்க வேண்டும் என்றும், பள்ளி தொடங்கும் நேரத்தில் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் நிர்ணையிக்கப்பட்ட இடத்தில் ஒன்றுகூட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சிறந்த ஆளுமைகள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் சுயசரிதைகளைப் பற்றி விவாதிக்கவும், பள்ளி நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தினசரி அறிவிப்புகளை வெளியிடவும், மாணவர்களை ஊக்குவிக்கவும், நேர்மறையான சிந்தனைகளை வளர்க்கவும், உத்வேகமான உரைகளை வழங்கவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x