Last Updated : 13 Jun, 2024 08:03 PM

 

Published : 13 Jun 2024 08:03 PM
Last Updated : 13 Jun 2024 08:03 PM

கேரள சலசலப்பு: பாதிரியாருக்கு ஆதரவாக பினராயியை எதிர்க்கும் இடதுசாரிகள்!

மக்களவை தேர்தலில் மீண்டும் மிகப் பெரிய தோல்வி. 2019 போல் இந்த முறையும் 19 தொகுதிகளிலும் தோற்று ஒன்றில் மட்டுமே வென்றது கேரளாவில் ஆளும் சிபிஎம் (எல்டிஎஃப்) கூட்டணி. தொடர் தோல்விகள் விமர்சனங்களுக்கு வித்திட்டது. ஆனால, இந்த விமர்சனங்களுக்கு முதல்வர் பினராயி விஜயன் கொடுத்து வரும் பதில்கள், இடதுசாரிகளே அவரை எதிர்க்கும் அளவுக்கு சென்றிருக்கிறது.

என்ன நடந்தது? - "கேரளாவில் இடதுசாரிகள் தொடர்ந்து மக்கள் அளிக்கும் அதிர்ச்சி தோல்விகளில் இருந்து பாடம் கற்கத் தயாராக இல்லை என்றால், மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் ஏற்பட்ட நிலைதான் கேரளத்திலும் உருவாகும். மக்களவை தேர்தலில் கேரளாவில் இடதுசாரிகள் வீழ்ச்சியடைய முக்கிய காரணங்களில் ஒன்று, தற்போதைய அரசு மீதான மக்களின் வலுவான எதிர்ப்பு உணர்வு. சிபிஎம் எவ்வளவுதான் மறுக்க முயன்றாலும் அதுவே உண்மை.

பொருளாதாரக் கொள்கைகளில் தோல்வி, கட்சியில் ஒழுக்கமின்மை, மிக தவறான போலீஸ் கொள்கைகள், ஊடகங்கள் மீதான அடக்குமுறை, கூட்டுறவு வங்கிகள் தொடங்கி அரசின் துறைகளில் எழுந்துள்ள ஊழல் புகார்கள், தொழிலாளர்களின் ஓய்வூதியம் ஒழிக்கப்பட்டது, சிபிஎம்மின் மாணவர் அமைப்பான எஸ்எப்ஐயின் வன்முறை அரசியல், கட்சியில் விமர்சனங்களுக்கு சகிப்புத்தன்மையின்மை, மத-சமூக அமைப்புகள் மீதான காழ்ப்புணர்வு, தீவிர வலதுசாரி கொள்கைகள் போன்றவையே இடதுசாரிகளின் தேர்தல் தோல்விக்கு காரணம்.

இதைவிட, பாசிசத்திற்கு எதிராக துணிச்சலாக போராடிய ராகுல் காந்தியை குறிவைத்து பாஜகவைவிட இடதுசாரிகள் செய்த பிரச்சாரம் மதச்சார்பற்ற மக்கள் மத்தியில் சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.

பினராயி அரசின் முதல் ஐந்து ஆண்டுகளை ஒப்பிடும்போது, ​​தற்போதுள்ள அரசின் தரம் வீழ்ச்சியடைந்தது மற்றொரு முக்கிய காரணம். பெரும்பாலான அமைச்சர்களின் செயல்பாடு பரிதாபமாக உள்ளது. இதேபோல் உங்களின் ஆணவம் மேலும் தொடர்ந்தால் இதைவிட பெரிய பின்னடைவுகள் ஏற்படும். காத்திருந்து பாருங்கள்.

எப்போதும் வெள்ளம், தொற்றுநோய்கள் என பேரிடர்கள் உங்களை மீட்காது. உங்களின் கிட் அரசியலுக்கு மக்கள் ஒருமுறைக்கு மேல் கவிழ மாட்டார்கள், குறிப்பாக அது கேரளாவில் நடக்காது. நோய் ஆழமாக செல்கிறது என்றால் சிகிச்சையும் தீவிரமாக இருக்க வேண்டும். இடதுசாரிகள் இடதுசாரிகளாக தானே இருக்க வேண்டும். இண்டிகேட்டரை இடப்புறம் வைத்துவிட்டு வலது பக்கம் ஓட்டினால் விபத்து ஏற்படும். மேலும் இலக்கையும் அடைய முடியாது." - இது கேரளாவில் இடதுசாரிகளின் தேர்தல் தோல்விக்கான காரணங்களை சுட்டிக்காட்டி மலங்கரா யாக்கோபைட் சிரியன் ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் பாதிரியார் கீவர்கீஸ் மார் குரிலோஸ் வெளியிட்ட பதிவு.

இப்பதிவுக்கு அரசு விழாவில் பதில் கொடுத்த முதல்வர் பினராயி விஜயன், "பாதிரியார்களிலும் முட்டாள்கள் இருக்கிறார்கள்" என்று கடுமையாக விமர்சித்தார். பினராயி விஜயனின் பதில் விமர்சனத்துக்கு தற்போது எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இந்த எதிர்ப்புகள் பாதிரியார்கள் தரப்புகளில் இருந்தோ, அல்லது கிறிஸ்தவ மக்களிடமோ இருந்தோ அல்ல. மாறாக, இடதுசாரிகள் தரப்பில் இருந்தே பினராயிக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளது ஆச்சர்யப்படக் கூடிய விஷயம். பாதிரியாரை விமர்சிக்க பினராயி விஜயன் பயன்படுத்திய முட்டாளின் மலையாள சொல்லான 'விவரதோஷி' சொல்லைப் பயன்படுத்தி வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

இடதுசாரிகள் ஒரு பாதிரியாருக்காக தங்களின் சொந்த முதல்வரான எதிர்க்க என்ன காரணம் எனக் கேட்டால், அதற்கு அந்த பாதிரியார் தான் பதிலாக இருக்கிறார். கேரள பாதிரியார்கள் வட்டத்தில் கம்யூனிஸ்ட் பாதிரியார் என அழைக்கப்படக் கூடியவர் கீவர்கீஸ் மார் குரிலோஸ். முற்போக்கு சிந்தனைகளுடன் எப்போதும் இடதுசாரிகளுக்கு ஆதரவாக நின்றவர் இந்த குரிலோஸ். மேலும், நடந்து முடிந்த தேர்தலில் எல்.டி.எஃப்-க்கு பெரிதும் ஆதரவளித்த ஒரே கிறிஸ்தவப் பிரிவாக இருந்ததும் குரிலோஸ் தலைமையிலான யாக்கோபைட் சிரியன் ஆர்த்தடாக்ஸ் சர்ச் மக்களே.

பாதிரியார் குரிலோஸ் தனது அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை ஒருபோதும் மறைத்ததில்லை. முஸ்லிம்கள் மீது கிறிஸ்தவ தேவாலயங்கள் மத்தியில் அதிகரித்து வரும் விரோதப் போக்கை கடுமையாக கேரளத்தில் எதிர்த்த ஒரே முக்கிய பாதிரியார் இவர்தான். இதற்கு சான்று தான் மலபார் கத்தோலிக்க திருச்சபையின் பிஷப் ஜோசப் கல்லாரங்கட் “லவ் ஜிஹாத்” பற்றி பேசியபோது, ​​“வெறுப்பு அரசியலைப் பிரச்சாரம் செய்ய கிறிஸ்தவத்தைப் பயன்படுத்த வேண்டாம்” என்றார் பகிரங்கமாக.

மேலும் இடதுசாரிகள் எதிர்த்த “கேரள ஸ்டோரி” திரைப்படம் கேரளாவின் திருச்சபைகளால் திரையிடப்பட்டதற்கும் தனது எதிர்ப்பை வலுவாக பதிவு செய்தார் பாதிரியார் குரிலோஸ். இதுமட்டுமல்ல, கேரள கிறிஸ்தவ சமூகத்தில் நிலவும் சாதிய ரீதியான ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும் தனது குரலை பதிவு செய்து வருகிறார்.

இப்படியான நபரை முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். பாதிரியார் கூறும் கருத்தை ஆராயாமல் வெளிவந்துள்ள முதல்வரின் கண்மூடித்தனமான விமர்சனம், காடுகளை பார்க்காமல், மரத்தை மட்டும் பார்த்து விமர்சிப்பது போன்று உள்ளது என்று பினராயி விஜயனுக்கு எதிராக சொந்த கட்சியினரே இப்போது எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகின்றனர்.

இதற்கிடையே, தான் பினராயி விஜயனின் விமர்சனத்துக்கு பதில் கொடுத்துள்ள பாதிரியார் குரிலோஸ், “தனிப்பட்ட விமர்சனங்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. எனினும், நான் கூறிய எனது கருத்துகளுக்கும் இடதுசாரிகளுக்கும் ஆதரவாக நிற்கிறேன். இதற்கு மேல் எதுவும் சொல்வதற்கில்லை. முட்டாள் யார் என்று இன்னும் குழப்பத்தில் இருப்பவர்களுக்கு இது உதவும் என்று நம்புகிறேன்." என்றார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x