Published : 13 Jun 2024 01:15 PM
Last Updated : 13 Jun 2024 01:15 PM

‘குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 42 இந்தியர்களில் 19 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள்’ - அரசின் நடவடிக்கை என்ன?

திருவனந்தபுரம்: குவைத்தில் அடுக்குமாடி கட்டிட தீ விபத்தில் உயிரிழந்த 49 பேரில் 42 பேர் இந்தியர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 19 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை (ஜூன் 12) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.

கேரளாவைச் சேர்ந்தவர்கள்: உயிரிழந்தவர்களில் 42 பேர் இந்தியர்கள் என குவைத் அரசு உறுதிப்படுத்தி உள்ளது. இந்நிலையில், அவர்களில் 19 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என கேரள அமைச்சரவை தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் கேரளா அச்சம் தெரிவித்துள்ளது. மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் வழங்கப்படும் என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே, கேரளாவைச் சேர்ந்த இரண்டு முக்கிய தொழிலதிபர்களான யூசுப் அலி மற்றும் ரவி பிள்ளை ஆகியோரும் நிவாரண உதவி அளிக்க முன் வந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று யூசுப் அலியும், ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என்று ரவி பிள்ளையும் அறிவித்துள்ளதாக கேரள அமைச்சரவை தெரிவித்துள்ளது. இதன்மூலம், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மொத்த இழப்பீடாக தலா ரூ.12 லட்சம் வழங்கப்படும்.

இந்த தீ விபத்து தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மற்றும் ஒரு ஐஏஎஸ் அலுவலரை குவைத்துக்கு விரைவாக அனுப்பிவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியுறவுத் துறை அமைச்சர் தகவல்: இதனிடையே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், குவைத் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா அலி அல் யாஹ்யாவிடம் தொலைபேசியில் பேசி உள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா அலி அல் யாஹ்யா விடம் பேசினேன். தீ விபத்தை அடுத்து குவைத் அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து அப்போது விளக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்கப்படும் என்றும் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக இந்தியாவுக்கு அனுப்ப வலியுறுத்தப்பட்டது. காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்த்தன் சிங் இன்று குவைத் சென்ற பிறகு நிலைமையை மதிப்பாய்வு செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து தீ விபத்தில் காயமடைந்த இந்தியர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் உதவிகளை மேற்பார்வையிடவும், உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதை உறுதி செய்யவும் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கிர்த்தி வர்தன் சிங் அவசரமாக குவைத் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

தயார் நிலையில் விமானப்படை விமானம்: இந்நிலையில், உயிரிழந்த இந்தியர்களின் உடல்களைக் கொண்டுவர இந்திய விமானப் படை விமானம் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "தீ விபத்தில் இறந்தவர்களின் உடல்களை குவைத் அதிகாரிகள் டிஎன்ஏ பரிசோதனை செய்து வருகிறார்கள். உயிரிழந்த இந்தியர்களின் உடல்களைக் கொண்டு வர இந்திய விமானப்படை விமானம் தயார் நிலையில் உள்ளது” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்தில் உயிரிழந்த 49 பேரில், 42 பேர் இந்தியர்கள் என்று தெரிவித்துள்ள அதிகாரிகள், மற்றவர்கள் பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், எகிப்து மற்றும் நேபாள நாடுகளைச் சேர்ந்தவர்கள் என கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x