Published : 13 Jun 2024 04:56 AM
Last Updated : 13 Jun 2024 04:56 AM
புதுடெல்லி: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மொத்தமுள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 135 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து, அவர் ஆந்திர மாநிலத்தின் முதல்வராக நான்காவது முறையாக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
இதையடுத்து சந்திரபாபு நாயுடு குடும்பத்தினரால் நடத்தப்படும் ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு சாதனைஉச்சத்தை தொட்டது. ஹெரிடேஜ்ஃபுட்ஸ் பங்குகளின் விலை இரண்டு வாரங்களில் இரண்டு மடங்கு அதிகரித்தது. இதனால்,அந்த நிறுவனத்தில் 35.7 சதவீதபங்குகளை வைத்திருக்கும் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருக்கு ஜாக்பாட் அடித்தது.
ஹெரிடேஜ் நிறுவனத்தில் சந்திரபாபு நாயுடு மனைவி புவனேஸ்வரிக்கு 34.37 சதவீத பங்குகளும், மகன் லோகேஷுக்கு 10.82 சதவீத பங்குகளும், மருமகள் பிராமணிக்கு 0.46 சதவீத பங்குகளும், அவரது 9 வயது பேரன் தேவன்ஷுக்கு 0.06 சதவீத பங்குகளும் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில், சந்திரபாபு நாயுடு தேர்தல் வெற்றியின் எதிரொலியால் ஹெரிடேஜ் பங்குகளின் விலை அதிகரித்ததை தொடர்ந்து தேவன்ஷ் வைத்திருக்கும் 56,075 பங்குகளின் மதிப்பு ஜூன் 3 அன்று ரூ.2.4 கோடியாக இருந்த நிலையில் அது ரூ.4.1 கோடியாக அதிகரித்துள்ளது. ஒரே வாரத்தில் தேவன்ஷுக்கு பங்குச் சந்தையின் மூலமாக ரூ.1.7 கோடி லாபம் கிடைத்துள்ளது.
ஹெரிடேஜ் ஃபுட்ஸ் பங்கு மதிப்பு மும்பை பங்குச் சந்தையில் 52 வார அதிகபட்சமாக ரூ.727.9-ஐ எட்டியதால் சந்திரபாபு நாயுடு குடும்பம் ரூ.1,225 கோடி லாபம்ஈட்டியுள்ளது. மே 23 அன்று அந்நிறுவனப் பங்கின் விலை ரூ.354.5-ஆக மட்டுமே காணப்பட்டது.
ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனம் கடந்த 1992-ல் தொடங்கப்பட்டது. இந்தியாவில் மதிப்பு கூட்டப்பட்ட பால்பொருட்கள் விற்பனையில் அது ஈடுபட்டு வருகிறது. இதில், தயிர், நெய், பனீர் உள்ளிட்டவை அடங்கும். இந்தியா முழுவதும் 11 மாநிலங்களில் 15 மில்லியன் குடும்பங்கள் ஹெரிடேஜ் வாடிக்கையாளர்களாக உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT