Published : 13 Jun 2024 04:09 AM
Last Updated : 13 Jun 2024 04:09 AM

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு: பவன் கல்யாண் உட்பட 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்

விஜயவாடா அடுத்த கேசரபல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக் கொண்டார். அருகில் ஆளுநர் அப்துல் நசீர், துணை முதல்வர் பவன் கல்யாண். படம்: கேவிஎஸ் கிரி

விஜயவாடா: ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். அவருடன் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் உட்பட 23 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 25 மக்களவை தொகுதிகளில் இக்கூட்டணி 21 இடங்களை கைப்பற்றியது. இதுபோல, மொத்தம் உள்ள 175 பேரவை தொகுதிகளில் இக்கூட்டணி 164 இடங்களை கைப்பற்றியது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மட்டும் 135 இடங்களை கைப்பற்றி தனி பெரும்பான்மை பெற்றுள்ளது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜனசேனா 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இதையடுத்து, விஜயவாடாவில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், ஆந்திர சட்டப்பேரவை தெலுங்கு தேசம் கூட்டணி கட்சிகளின் தலைவராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பிறகு, மாநில ஆளுநர் அப்துல் நசீரை கூட்டணி கட்சியினர் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். இதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் அப்துல் நசீர், ஆட்சி அமைக்க வருமாறு சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பு விடுத்தார்.

இதைத் தொடர்ந்து, விஜயவாடா விமான நிலையம் அருகே உள்ள கேசரபல்லியில் புதிய அரசு பதவியேற்பு விழா நேற்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், 4-வது முறையாக ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அப்துல் நசீர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். அவரை தொடர்ந்து, ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் உள்ளிட்ட 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

பிரதமர் மோடி பங்கேற்பு: பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் வந்து, இந்த விழாவில் கலந்துகொண்டார். முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற பிறகு அவருக்கு பிரதமர் மோடி பூங்கொத்து வழங்கி வாழ்த்தினார். அப்போது, தனது காலில் விழ முயன்ற சந்திரபாபுவை பிரதமர் மோடி தடுத்து நிறுத்தி அவரை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.

முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜே.பி.நட்டா, நிதின் கட்கரி, ராம்மோகன், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, தெலங்கானா முன்னாள் ஆளுநர்தமிழிசை சவுந்தரராஜன், மாநில பாஜகதலைவர் புரந்தேஸ்வரி, அமர் பிரசாத் ரெட்டி, தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, ராம்சரண், நாரா ரோஹித், சிவாஜி, நிதின், விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் மற்றும் ராம்கோ குழுமம், ஈஸ்வரி குழும தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. வேலை விஷயமாக அவர் கோவை சென்றுள்ளதாக அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்தார்.

சிரஞ்சீவியிடம் ஆசிர்வாதம்: ஜனசேனா தலைவர் பவன் கல்யாண்பதவியேற்றவுடன் மேடையில் இருந்தஆளுநர் அப்துல் நசீர், முதல்வர் சந்திரபாபு, பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, ஜே.பி.நட்டாஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். பின்னர், தனது அண்ணனான நடிகர்சிரஞ்சீவியை தேடிச் சென்று, அவரதுகாலில் விழுந்து ஆசி பெற்றார். ரஜினிகாந்த், பாலகிருஷ்ணா ஆகியோருக்கும் வணக்கம் தெரிவித்தார்.

பதவியேற்பு விழா பாதுகாப்பு பணியில் 7 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டனர்.

பதவியேற்பு விழாவுக்கு பிறகு பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா மற்றும் சிரஞ்சீவி, ரஜினி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களை விமான நிலையம் வரை வந்து சந்திரபாபு நாயுடு வழியனுப்பி வைத்தார்.

திருப்பதியில் இன்று சுவாமி தரிசனம்: பிறகு, சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தினருடன் விஜயவாடாவில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவு திருப்பதி வந்தார். இவர்கள் ரேணிகுண்டாவில் இருந்து காரில் திருமலைக்கு சென்றனர். அவர்களை தேவஸ்தான அதிகாரிகள், அரசு உயரதிகாரிகள் வரவேற்றனர். இரவு திருமலையில் தங்கிய முதல்வரின் குடும்பத்தினர் இன்று காலை ஏழுமலையானை தரிசிக்கின்றனர். இன்று மாலை4.41 மணிக்கு அமராவதியில் முதல்வராக பொறுப்பேற்கும் சந்திரபாபு நாயுடு, அரசு ஆசிரியர் பணியிடங்களுக்கான கோப்பில் முதல் கையெழுத்திடுகிறார்.

துணை முதல்வர் ஆனார் பவன் கல்யாண்: நடந்து முடிந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணியின் வெற்றிக்கு ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் முக்கிய பங்காற்றியுள்ளார். அவரது கட்சி 21 பேரவை தொகுதிகள் மற்றும் 2 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சந்திரபாபு நாயுடுவின் வெற்றிக்கு மட்டுமின்றி, மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி மலரவும் பவன் கல்யாணின் பங்களிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனால், அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் ஜனசேனா கட்சியில் இருந்து பவன் கல்யாண் உட்பட 3 பேர், பாஜகவில் இருந்து ஒருவர் இடம்பெற்றுள்ளனர். அமைச்சரவையில் 3 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். 17 பேர் புதிய முகங்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x