Last Updated : 12 Jun, 2024 01:29 PM

1  

Published : 12 Jun 2024 01:29 PM
Last Updated : 12 Jun 2024 01:29 PM

மக்களவை தேர்தல் முடிவுகள்: இந்திய ஜனநாயகம் அளித்த வலுவான எதிர்க்கட்சி

நரேந்திர மோடியின் அரசு 'மோடி 3.0' அரசாக அனைவராலும் குறிப்பிடப்படுகிறது. மாறாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசை, ‘என்டிஏ 2.0' அரசு என்று அழைப்பதே பொருத்தமானது. என்டிஏவின் முதல் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்தான். அரசியல் செயல்பாட்டாளர் யோகேந்திர யாதவ் உள்ளிட்ட மூத்த அரசியல் விமர்சகர்கள் இது பிரதமர் மோடிக்கு தார்மீக மற்றும் அரசியல் தோல்வி என்று கூறி வருகின்றனர். ஆனால், தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றது அரிதான சாதனை என்பதை மறுப்பதற்கில்லை.

எண்ணற்ற சமூக மனவோட்டங்களை கண்டறிய சிஎஸ்டிஎஸ் அமைப்பின் புள்ளி விவரங்கள் உதவுகின்றன. இதன் வாக்கு சதவிகிதங்களின்படி, தேசிய அளவில் பாஜக 2019ல் பெற்ற 37 சதவித வாக்குகளை தக்கவைத்துக் கொண்டுள்ளது. எனினும், இந்தி பேசும் மாநிலங்களில் வாக்கு சதவிகிதத்தை சற்று இழந்தது. தென் மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள மாநிலங்களில் பாஜக புதிய வாக்கு வங்கிகளை பெற்றுள்ளது. இதற்குமுன், பாஜகவுக்கு குறைவான செல்வாக்கு இருந்த இந்த மாநிலங்களில் அது பன்மடங்கு அதிகரித்துள்ளது.

மறுபுறம், ஒரு காலத்தில் இந்தியா முழுவதையும் கட்டியாண்ட கட்சியான காங்கிரஸுக்கு 22 சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. இது 2019 தேர்தலை விட 2.5 சதவிகிதம் அதிகமாகும். நம் தேசத்தின் இரு பிரதான கட்சிகளுக்கு இடையிலான வாக்கு சதவிகிதத்தில் இமாலய அளவு வேறுபாடு உள்ளது. இந்த இடைவெளி குறைந்து அவற்றின் வாக்கு வங்கிகள் விரைவில் சமனாகும் சாத்தியக்கூறுகள் தென்படவில்லை. இந்த வாக்கு சதவிகிதங்களை ஆழமாகப் பகுத்து ஆராயும் பொழுது, சில சுவாரஸ்யமான உண்மைகளும், பெரிய அரசியல் மற்றும் சமூக தாக்கங்களை கொண்ட போக்குகளும் தென்படுகின்றன.

தேசிய ஜனநாயக கூட்டணி இந்து மக்களின் வாக்குகளில் சரிபாதி தன்வசப்படுத்தியுள்ளது என்பது தெரியவருகிறது. கிட்டத்தட்ட 45 சதவிதத்திற்கும் மேலான இந்து வாக்குகளை, பாஜக தன்வசம் தக்கவைத்துக்கொண்டுள்ளது. இதன் மூலம் ’இந்து இருதய சாம்ராட்’ என்று பிரதமர் நரேந்திர மோடி அழைக்கப்படுவதில் தவறேதுமில்லை என்று சொன்னால் மிகையாகாது. தனது எஃகு கோட்டைகளான வட மாநிலங்களில் பாஜகவின் வாக்கு வங்கி சிறு பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது உண்மை. எனினும், அதனை சமன் செய்யும் விதமாக புதிய பகுதிகளில் இருந்து இந்து வாக்காளர்களின் பெருத்த ஆதரவை பாஜக தனதாக்கியுள்ளது.

மோடி - ஷாவின் வருகையை ஒட்டி இந்திய சமூகமானது அரசியல் ரீதியாக இடது - வலது என நேர்கோட்டில் பிளவுபட்டுள்ளது என்ற விமர்சனங்கள் நிலவுகின்றன. எனினும், உண்மை நிலவரமானது அதை விட அச்சத்தைத் தரக்கூடியதாக அமைந்துள்ளது. சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவரை காணப்படாத அளவில் நமது அரசியல் சமூகம், மத ரீதியில் பிளவுபட்டுள்ளது. அது ஆபத்தான ஓர் இடத்தை நோக்கி நம் நாட்டை நகர்த்தி செல்ல வழிவகுக்க கூடும்.

ஏனெனில், இந்தியாவின் இரண்டாவது பெரிய கட்சியான காங்கிரஸிற்கு 2019 தேர்தலின்போது இந்து மக்களின் 10 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளே கிடைக்கப் பெற்றன. இம்முறை அது சற்றே அதிகமாகி 12-13 சதவீதத்தை எட்டியுள்ளது. இதன் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன.

இதில் முக்கியமானவை, எதிர்க்கட்சிகளின் அதீத முயற்சியால் கட்டியெழுப்பப்பட்ட இண்டியா கூட்டணி மற்றும் ராகுல் காந்தி மேற்கொண்ட ’பாரத் ஜோடோ’ யாத்திரை எனக் கூறலாம். இவற்றின் பிரதிபலனாக காங்கிரஸுக்கு கூடுதலாக 2-3 சதவீத இந்து வாக்குகள் கிடைத்திருக்கும் வாய்ப்புகள் உள்ளன. தேசிய அளவில் பாஜகவின் மோடியின்றி வேறு தலைவர் எவரும் இல்லை என்ற நிலை இருந்தது. இதை மறுக்கும் வகையில், இண்டியா கூட்டணி முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வளர்ந்திருப்பது தெரிகிறது. ஆனாலும் மோடியின் சமஸ்தானத்தை குலைக்கும் அளவில் ராகுல் காந்தியோ காங்கிரஸ் கட்சியோ மக்களின் நம்பிக்கையை பெறவில்லை. ஏனெனில், எந்த ஒரு கட்சியும் பத்தாண்டுகால ஆட்சியில் இருக்கும் போது மக்கள் மத்தியில் சிறிதளவில் அயற்சி ஏற்படுவது வழக்கம். இதன் வெளிப்பாடாகவே இத்தேர்தல் முடிவுகள் காணப்படுகின்றன.

நிறைவடைந்த பொதுத்தேர்தலானது கடந்த இரண்டு மாத காலங்களாக நடைபெற்றது. இதில், பாஜகவின் நகர்வுகளும், உத்திகளும் பல்வேறு திட்டங்களுடன் பல மாற்று வழிமுறைகளைக் கொண்ட ஒரு பயணமாக அமைந்துள்ளது. அதன் வெளிப்பாடாகவே தெலங்கானா, ஆந்திர பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் அக்கட்சி ஈட்டிய கூடுதல் தொகுதிகளைக் கூறலாம். ஆந்திராவில் தன் கூட்டணியின் உதவியுடன் பாஜக பெரும் கட்சியாக தன்னை நிலைநிறுத்தி கொண்டுள்ளது. இண்டியா கூட்டணியின் ஒட்டுமொத்த எண்ணிக்கையைவிட ஒரு தனிக்கட்சியாக பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றுவது என்பது சாதாரண காரியம் அல்ல.

இதன் பின்னணியில், பிரதமரின் தீவிரப் பிரச்சாரங்களை பார்க்க வேண்டும். இவர் குறிப்பாக தமிழகத்தில் தமிழ் மற்றும் தமிழர்களை நோக்கி பல முன்னெடுப்புகளை செய்தார். கேரளாவில் தம் கட்சியின் மாநிலங்களவை எம்பியான சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் பிரதமர் கலந்துக்கொண்டார். இதுபோன்ற காரணங்களினால், பாஜக தனது 37 சதவிகித வாக்கு வங்கியை தக்கவைக்க முடிந்தது. பிரதமர் மோடியின் தொடர்ந்து இரண்டு ஆட்சிகளுக்கு எதிரான அதிருப்தி சூழலில் கூட காங்கிரஸ் கட்சி தனது வாக்கு வங்கியை 2.5 சதவிகிதம் மட்டுமே உயர்த்த முடிந்துள்ளது. மீதம் உள்ள தனது 230 தொகுதிகளை இண்டியா கூட்டணி வென்றெடுக்க, இந்திய பொது சமூகத்தின் அரசியல் விழிப்புணர்வு மற்றும் தெளிவுகளும் காரணம்.

ஏனெனில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், நேர்காணல்களிலும் அமர்ந்துக்கொண்டு தனது கருத்துகளை மக்களின் கருத்தாக ஆளும் கட்சியினர் உமிழ்ந்தனர். இந்த அறிவார்ந்தவர்களை காட்டிலும் இந்திய சமூத்தின் மெய்யறிவு அளப்பறியது. அதிகாரத்திற்கும் அராஜகப்போக்கிற்கும் இடையிலிருக்கும் மெல்லிய கோட்டை கண்டறியக்கூடிய அதீத ஞானம் எந்தவொரு தனிமனிதருக்கும் உரித்தானதல்ல. மாறாக, அது ஒட்டுமொத்த இந்திய சமூகத்தின் கூட்டு மனசாட்சியினால் மட்டுமே இயலும் காரியம் என்பது மீண்டும் தெளிவாகியுள்ளது. பாஜகவிற்கு அபாய ஒலியாக அமைந்த இந்த தேர்தலின் முடிவுகளில் இந்திய ஜனநாயகத்தின் ஓர் வலுவான எதிர்கட்சி அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது.

(கட்டுரையாளர்: பி.எஸ்.கவுதம், அரசியல் செயற்பாட்டாளர்)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x