Published : 12 Jun 2024 10:19 AM
Last Updated : 12 Jun 2024 10:19 AM

சந்திரபாபு நாயுடு அரசில் 24 அமைச்சர்கள் - துணை முதல்வராகிறார் பவன் கல்யாண்

விஜயவாடா: சந்திரபாபு நாயுடு தலைமையில் பதவியேற்க உள்ள அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் உள்ளிட்ட 24 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பவன் கல்யாண் துணை முதல்வராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது.

ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் கூட்டம் விஜயவாடாவில் நேற்று நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம், பாஜக மற்றும் ஜனசேனா கட்சிகளைச் சேர்ந்த 162 எம்எல்ஏ.க்கள் பங்கேற்றனர். இதில் ஆந்திர மாநில சட்டப்பேரவை தெலுங்கு தேசம் கூட்டணி கட்சிகளின் தலைவராக சந்திரபாபுநாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

கூட்டணி கட்சிகளின் சார்பில் சந்திரபாபு நாயுடு தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தையும், ஆந்திர ஆளுநர் நசீர் அகமதிடம் பாஜக மாநில தலைவர் புரந்தேஸ்வரி, மற்றும் தெலுங்குதேசம், ஜனசேனா கட்சி பிரதிநிதிகள் கொண்டு போய் கொடுத்தனர். சந்திரபாபு நாயுடுவை ஆட்சி அமைக்க வரும்படி அழைப்பு விடுக்கும்படி இவர்கள் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர்.

விஜயவாடா விமான நிலையம் அருகே உள்ள கேசரபல்லி எனும் இடத்தில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு இன்று காலை 11.27 மணிக்கு சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி பிரமாணம் செய்ய உள்ளார். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா ஆகியோர் ஆந்திரா வந்துள்ளனர். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, நடிகர்கள் ரஜினி காந்த், சிரஞ்சீவி மற்றும் பல அரசியல், சினிமா பிரமுகர்கள் இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர்.

அமைச்சர்களின் பட்டியல்: இதற்கிடையே, சந்திரபாபு நாயுடு தலைமையில் பதவியேற்க உள்ள அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் உள்ளிட்ட 24 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பவன் கல்யாண் பெயர் முதல் பெயராகவும், நர லோகேஷ் பெயர் இரண்டாவது பெயராகவும் இடம்பெற்றுள்ளது.

இதன்மூலம், பவன் கல்யாண் துணை முதல்வராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது. 24 அமைச்சர்களில் மூன்று பேர் ஜனசேனா கட்சியை சேர்ந்தவர்களும், பாஜகவை சேர்ந்த ஒருவருக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என எதிபார்க்கப்பட்ட நிலையில், அவரின் பெயர் அமைச்சர்கள் பட்டியலில் இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x