Published : 02 May 2018 08:41 AM
Last Updated : 02 May 2018 08:41 AM
திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை தனியார் வங்கியில் டெபாசிட் செய்தது குறித்து நடந்து வரும் வழக்கில், வட்டி முக்கியமா? அல்லது பாதுகாப்பு முக்கியமா? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு திருப்பதி தேவஸ்தானம் 4 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு உள்நாட்டிலிருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திரளாக வருகின்றனர். பக்தர்கள் கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் பணம் தற்போது ஆண்டுக்கு ரூ.1,100 கோடியை தாண்டியுள்ளது. தினமும் சராசரியாக ரூ.2.5 கோடி முதல் 3 கோடி வரை உண்டியல் மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருவாய் கிடைத்து வருகிறது. இந்த காணிக்கை பணத்தை அரசு வங்கிகளில் டெபாசிட் செய்து அதிலிருந்து கிடைக்கும் வட்டிப் பணத்தில் நித்ய அன்னதானம், மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.
இதுவரை ரூ.10,300 கோடி வரை பல்வேறு பொதுத்துறை வங்கியில் தேவஸ்தானம் டெபாசிட் செய்துள்ளது. இந்நிலையில் கடந்த 2004-ல் டெபாசிட் தொகைக்கு அரசு வங்கிகளை விட கூடுதல் வட்டி வழங்குவதாக சில தனியார் வங்கிகள் தெரிவித்தன. ஆனால் இதற்கு அறங்காவலர் குழு ஒப்புக்கொள்ளவில்லை. ஆதலால் இந்த யோசனை கைவிடப்பட்டது. ஆனால் சமீபத்தில் முதிர்வு காலம் அடைந்த ரூ.4,000 கோடியை அவசர அவசரமாக கடந்த மார்ச் மாதத்தில் அப்படியே மறு டெபாசிட் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்தது. அதில் அரசு வங்கிகளில் ரூ.3,000 கோடியும், அவற்றை விட அதிக வட்டி வழங்குவதாக கூறிய ஒரு தனியார் வங்கியில் ரூ.1,000 கோடியும் நிபந்தனைகளுக்கு எதிராக டெபாசிட் செய்தது.
இதற்கு எதிராக திருப்பதியை சேர்ந்த நவீன் குமார் ரெட்டி என்பவர் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம், நிபந்தனைகளை மீறி, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, ஒரு தனியார் வங்கியில் பக்தர்களின் பணமான ரூ.1,000 கோடியை டெபாசிட் செய்துள்ளது. இப்பணத்தை மீண்டும் அரசு வங்கியில் டெபாசிட் செய்ய உத்தரவிடவேண்டும் என அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், நேற்று இதனை விசாரித்தது. அப்போது இரு தரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகினர். அப்போது, “பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணத்தை அரசு வங்கிகளில் மட்டுமே டெபாசிட் செய்ய வேண்டும் என நிபந்தனை இருந்தாலும், அதனை மீறி தனியார் வங்கியில் தேவஸ்தானம் டெபாசிட் செய்தது ஏன்? வட்டி முக்கியமா? அல்லது பாதுகாப்பு முக்கியமா? என நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார். இது குறித்து 4 வாரங்களுக்குள் திருப்பதி தேவஸ்தானம் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT