Published : 11 Jun 2024 10:25 AM
Last Updated : 11 Jun 2024 10:25 AM
புதுடெல்லி: வெளியுறவு அமைச்சராக எஸ்.ஜெய்சங்கர் இன்று (ஜூன் 11) பொறுப்பேற்றுக் கொண்டார். மோடி 3.0 அமைச்சரவையில் ஜெய்சங்கருடன் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் முந்தைய ஆட்சியில் தாங்கள் வகித்த அதே இலாகாவை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை அவர் முறைப்படி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் பேசிய ஜெய்சங்கர், “மீண்டும் ஒரு முறை வெளியுறவு அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதை மிகப்பெரிய கவுரவமாகக் கருதுகிறேன். கடந்த ஆட்சியில் வெளியுறவு அமைச்சகம் வெகு சிறப்பாகச் செயல்பட்டது. ஜி20 மாநாட்டை தலைமையேற்று நடத்தினோம். கரோனா சவால்களை எதிர்கொண்டோம். கரோனா தடுப்பூசிகளைத் தயாரித்துப் பகிர்ந்து கொண்டோம். உக்ரைன் உள்பட வெளிநாட்டு போர்களில் சிக்கிய இந்தியர்களை ஆபரேஷன் கங்கா, ஆபரேஷன் காவிரி என்ற ஆபரேஷன்கள் மூலம் பத்திரமாக தாயகம் மீட்டு வந்தோம்.
கடந்த 10 ஆண்டுகளில் மோடி ஆட்சியின் கீழ் வெளியுறவு அமைச்சகம் மக்கள் நலன் சார்ந்த அமைச்சகமாகியுள்ளது. பாஸ்போர்ட் சேவைகளாக இருக்கட்டும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சமூக நல நிதி வழங்கி ஆதரிப்பதாக இருக்கட்டும் அமைச்சகத்தின் மக்கள் நலன் வீச்சு அதிகரித்துள்ளது.
எல்லையில் சீனாவின் அத்துமீறல் தந்திரங்கள், மேற்கு ஆசியா மற்றும் உக்ரைனில் நிலவும் போர்ச் சூழல்களுக்கு மத்தியில் இந்தியாவின் நலன்களைப் பாதுகாத்தல் ஆகியன வெளியுறவு அமைச்சராக கவனிக்க வேண்டிய முக்கிய விவகாரங்களாக இருக்கும்.
எந்த ஒரு நாட்டிலும் குறிப்பாக ஒரு ஜனநாயக நாட்டில் ஓர் அரசு மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பது என்பது மிகப்பெரிய சவால். மோடி அரசு அதனை நிகழ்த்தியுள்ளது. இப்போது இந்தியாவின் அரசியல் ஸ்திரத்தன்மை மீது உலக நாடுகள் கவனம் கொள்ளும்.
பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான நம் உறவும் வெவ்வேறு. அவற்றுடனான பிரச்சினைகளும் வெவ்வேறு. பாகிஸ்தானுடன் ஆண்டாண்டு காலமாக இருக்கும் எல்லை தாண்டிய பயங்கரவாத சிக்கலுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும். சீனாவுடனான எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.
இப்போது இருக்கும் சூழலில் உலக நாடுகள் பல பிரச்சினைகளால், மோதல்களால் பிரிந்து கிடக்கிறது. இத்தகைய சூழலில் இந்தியா மீது பல்வேறு நாடுகளும் நம்பிக்கை கொண்டுள்ளன. இதனால், இந்தியாவின் தாக்கமும், அதன் நன்மதிப்பும் அதிகரிக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT