Published : 11 Jun 2024 05:16 AM
Last Updated : 11 Jun 2024 05:16 AM

விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி வழங்க பிரதமர் மோடி முதல் கையெழுத்து: 3 கோடி கான்கிரீட் வீடு கட்ட ஒப்புதல்

விவசாயிகள் நிதியுதவி தொடர்பான கோப்பில் முதல் கையெழுத்திட்ட மோடி.

புதுடெல்லி: நாடு முழுவதும் 9.30 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியுதவி வழங்குவது தொடர்பான கோப்பில் பிரதமர் மோடி முதல் கையெழுத்திட்டார்.

பிரதமராக 3-வது முறை பதவியேற்ற மோடி, நேற்று தனது அலுவலகத்துக்கு வந்தார். விவசாயிகளுக்கு ‘பிஎம் கிசான் சம்மான்’ நிதி திட்டத்தின் 17-வது தவணையை விடுவிப்பதற்கான கோப்பில் அவர் முதல் கையெழுத்திட்டார். இதன்படி, நாடு முழுவதும் 9.30 கோடி குறு, சிறு விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளில் ரூ.6,000 நிதியுதவி அவர்களது வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பின்னர், பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம் அவர் பேசியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி அரசு விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறது. இதன்காரணமாகவே எங்கள் அரசு பதவியேற்றவுடன் விவசாயிகளின் நலன் தொடர்பான கோப்பில் முதல் கையெழுத்திட்டு உள்ளேன். வரும் காலத்தில் விவசாயிகள், வேளாண் துறை வளர்ச்சிக்காக அயராது பாடுபடுவேன்.

வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த லட்சியத்தை எட்ட நாம் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். இதற்கு பிரதமர்அலுவலக அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். பிரதமர் அலுவலகம், சேவை அலுவலகமாக மாற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் 3 கோடி ஏழை குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 4.21 கோடி ஏழை குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டு உள்ளன. தற்போது கூடுதலாக 3 கோடி வீடுகள் கட்டப்பட உள்ளன. இதன்மூலம் நகரங்கள், கிராமங்களை சேர்ந்த ஏழைகள் பலன் அடைவார்கள்.

புதிய அரசின் முதல் 100 நாட்களுக்கான செயல்திட்டம் வரையறுக்கப்பட்டு உள்ளது. இதன்படி, ஒரே நாடு, ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், மகளிர் இடஒதுக்கீடு, முதியோருக்கு இலவச மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முழுவீச்சில் செயல்படுத்தப்பட உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x