Published : 11 Jun 2024 06:47 AM
Last Updated : 11 Jun 2024 06:47 AM

99 காங்கிரஸ் எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: குடியரசு தலைவருக்கு டெல்லி வழக்கறிஞர் கடிதம்

புதுடெல்லி: சட்டத்தை மீறி ஆண்டுக்கு ரூ.1 லட்சம் தருவோம் என காங்கிரஸ் கட்சி உத்தரவாத அட்டை வழங்கியதால், அக்கட்சியின் 99 எம்.பி.க்களையும் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என டெல்லி வழக்கறிஞர் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.8,500 வீதம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் அவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ராகுல் மற்றும் பிரியங்கா உள்ளிட்டோர் இந்த வாக்குறுதியைக் கூறி வாக்கு கேட்டனர்.

உத்தரவாத அட்டை: இன்னும் சொல்லப்போனால், முக்கிய வாக்குறுதிகளை உத்தர வாத அட்டை என்ற பெயரில் அச்சடித்து உத்தர பிரதேசத்தின் வாக்காளர்களுக்கு வழங்கி உள்ளனர். இதனிடையே, தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. அக்கட்சிக்கு 99 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

இதையடுத்து, மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்கள் முன்பு ஏராளமான பெண்கள் உத்தரவாத அட்டையுடன் முற்றுகையிட்டனர். குறிப்பாக உத்தர பிரதேசம், கர்நாடக மாநில காங்கிரஸ் அலுவலகங்களில் பெண்கள் குவிந்தனர். இந்த செய்தி ஊடகங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்து பாஜக தலைவர்களும் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். வாக்காளர்களை காங்கிரஸ் எப்படி ஏமாற்றி உள்ளது என்று சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த சூழலில் டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் வைபோர் ஆனந்த் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் (1951) 123-வது பிரிவின்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்கள் சார்பில், வாக்காளர்களை ஈர்ப்பதற்காக பணம், பரிசுப் பொருளை லஞ்சமாக கொடுப்பது குற்றம் ஆகும். எனவே, ராகுல் காந்தியின் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறும் செயல் ஆகும். அதிலும் குறிப்பாக உத்தரவாத அட்டை வழங்கியது லஞ்சம் கொடுப்பதற்கு சமம். இந்த உத்தரவாத அட்டையுடன் பெண்கள் காங்கிரஸ் அலுவலகங்களை முற்றுகையிட்டது ஊடகங்களில் செய்தியாக வெளிவந்துள்ளது.

எனவே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 146-வது பிரிவின் கீழ்,காங்கிரஸ் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். அத்துடன் இந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற 99 பேரையும் தகுதி நீக்கம்செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x