Published : 10 Jun 2024 07:01 PM
Last Updated : 10 Jun 2024 07:01 PM

ஏழைகளுக்கு 3 கோடி வீடுகள்: பிரதமர் மோடியின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்

புதுடெல்லி: ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் (PMAY) 3 கோடி வீடுகள் கட்ட முடிவெடுக்கப்பட்டு, அதற்கான நிதியுதவி அளிப்பதற்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு, முதல் அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் பிரதமரின் இல்லத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், புதிய அரசின் முதல் முடிவாக, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் மேலும் 3 கோடி வீடுகள் கட்டுவதற்கு நிதியுதவி அளிப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நாடு முழுவதும் இந்த திட்டத்தின் கீழ் 4.21 கோடி இலவச வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வீடுகள் கட்டப்படுகிறது. இத்திட்டத்தை மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது. பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்றவுடன் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் முதல் முடிவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் இலாகா ஒதுக்கீடு, நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைமுறைகள், முதல் 100 நாள்களில் மோற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மோடியின் முதல் கையெழுத்து: மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி திங்கட்கிழமை தனது அலுவலகத்தில், பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு நிதியின் 17-வது தவணையை விடுவிப்பதற்கான தமது முதல் கோப்பில் கையெழுத்திட்டார். விடுவிக்கப்படும் ரூ.20,000 கோடி நிதியின் மூலம் 9.3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள்.

இந்தக் கோப்பில் கையெழுத்திட்ட பின்னர் பிரதமர் மோடி கூறும்போது, “எங்களது அரசு விவசாயிகள் நலனில் முழு அர்ப்பணிப்புடன் உள்ளது. எனவே, பொறுப்பேற்றவுடன் கையெழுத்திடப்பட்ட முதல் கோப்பு விவசாயிகள் நலன் தொடர்பானது என்பதாகும். வரும் காலங்களில் விவசாயிகள் மற்றும் வேளாண் துறைக்காக இன்னும் அதிகமாக உழைக்க விரும்புகிறோம்” என்றார்.

ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அடுத்தடுத்து மத்திய அமைச்சர்கள் பதவியேற்றனர். 72 அமைச்சர்களும் நேற்றே பதவியேற்றுக் கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x