Published : 10 Jun 2024 05:11 AM
Last Updated : 10 Jun 2024 05:11 AM

3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடந்த கோலாகல விழாவில் நரேந்திர மோடி மூன்றாவது முறைபிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவரோடு 71 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதிமுதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல்நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆட்சியமைக்க 272 எம்பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 293 தொகுதிகளில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையை பெற்றது.

கடந்த 7-ம் தேதி தலைநகர் டெல்லியில் என்டிஏ எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த கூட்டணியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றைய தினமே குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த அவர் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார்.

இதன்படி குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று இரவு 7.15 மணிக்கு புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அடுத்தடுத்து மத்திய அமைச்சர்கள் பதவியேற்றனர்.

30 கேபினட் அமைச்சர்கள்: 1) ராஜ்நாத் சிங், 2) அமித் ஷா,3) நிதின் கட்கரி, 4) ஜே.பி.நட்டா,5) சிவராஜ் சிங் சவுகான், 6) நிர்மலா சீதாராமன், 7) ஜெய்சங்கர், 8) மனோகர் லால் கட்டார், 9) எச்.டி.குமாரசாமி, 10) பியூஷ் கோயல், 11) தர்மேந்திர பிரதான், 12) ஜிதன்ராம் மாஞ்சி, 13) ராஜீவ்ரஞ்சன், 14) சர்வானந்த சோனோவால், 15) வீரேந்திர குமார், 16) ராம்மோகன் நாயுடு, 17) பிரகலாத் ஜோஷி, 18) ஜோயல் ஓரம்,19) கிரிராஜ் சிங், 20) அஸ்வினி வைஷ்ணவ், 21) ஜோதிர் ஆதித்ய சிந்தியா, 22) பூபேந்திர யாதவ், 23) கஜேந்திர சிங் ஷெகாவத், 24) அன்னபூர்ணா தேவி, 25) கிரண் ரிஜுஜு, 26) ஹர்தீப் சிங் புரி, 27) மன்சுக் மாண்டவியா, 28) கிஷன் ரெட்டி, 29) சிராக் பாஸ்வான், 30) சி.ஆர்.பாட்டீல்.

5 இணையமைச்சர் (தனி பொறுப்பு): 31) ராவ் இந்திரஜித் சிங், 32) ஜிதேந்திர சிங், 33) அர்ஜுன் ராம்மேக்வால், 34) பிரதாப் ராவ் கண்பத்ராவ் ஜாதவ், 35) ஜெயந்த் சவுத்ரி.

36 இணை அமைச்சர்கள்: 36) ஜிதின் பிரசாத், 37) ஸ்ரீபாதஎஸ்ஸோ நாயக், 38) பங்கஜ் சவுத்ரி, 39) கிஷன் பால், 40) ராம்தாஸ் அத்வாலே, 41) ராம்நாத் தாக்குர், 42) நித்யானந்த் ராய், 43) அனுபிரியா படேல், 44) சோமண்ணா, 45) பெம்மசானி சந்திரா, 46) எஸ்.பி.சிங் பாகேல், 47) ஷோபா கரந்த்லே, 48) கீர்த்தி வர்தன் சிங், 49) பி.எல். வர்மா, 50) சாந்தனு தாக்குர், 51) சுரேஷ் கோபி, 52) எல். முருகன், 53) அஜய்தம்தா, 54) பண்டி சஞ்சய் குமார், 55) கமலேஷ் பாஸ்வான், 56) பாகிரத் சவுத்ரி, 57) சதீஷ் சந்திர துபே, 58) சஞ்சய் சேத், 59) ரவ்நீத் சிங் பித்து, 60) துர்கா தாஸ், 61) ரக்சா கட்சே, 62) சுகந்த மஜும்தார், 63) சாவித்ரி தாக்குர், 64) டோகன் சாகு, 65) ராஜ் பூஷண் சவுத்ரி, 66) பூபதி ராஜு சீனிவாச வர்மா, 67) ஹர்ஷ் மல்ஹோத்ரா, 68) நிமுபென் பம்பானியா, 69)முரளிதர் மோகல், 70) ஜார்ஜ் குரியன், 71)பபித்ரா மார்கிரிட்டா ஆகியோர் அடுத்தடுத்து பதவியேற்றனர்.

அமைச்சர்களில் 27 பேர் ஓபிசி, 10 பேர் எஸ்சி, 5 பேர் எஸ்டி, 5 பேர் சிறுபான்மையினர் ஆவர். 24 மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளன.

கார்கே பங்கேற்பு: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். பிஹார் முதல்வர்நிதிஷ் குமார், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, நேபாள பிரதமர் பிரசண்டா, பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே, மொரிசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் உள்ளிட்ட வெளிநாட்டுத் தலைவர்களும் விழாவில் பங்கேற்றனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தூய்மைப் பணியாளர்கள், 3-ம் பாலின பிரதிநிதிகள், புதிய நாடாளுமன்ற கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், பெண் ரயில் ஓட்டுநர்கள் உட்பட 8,000 சிறப்பு விருந்தினர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.

தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, நடிகர்கள் ரஜினி காந்த், ஷாருக்கான், அக்சய் குமார், அனில் கபூர், அனுபம் கெர்உள்ளிட்டோரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்பிக்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது புதிய அரசின் முதல் 100 நாட்கள் திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம், பொது சிவில் சட்டம், வழிபாட்டு சட்டத்தில் திருத்தம், மகளிர் இடஒதுக்கீடு, 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச மருத்துவ சிகிச்சை, போட்டித் தேர்வு வினாத்தாள் கசிவதை தடுப்பது தொடர்பான சட்டம், சிஏஏ சட்டஅமலாக்கம், புதிய கல்வி கொள்கை, மக்கள் தொகை கணக்கெடுப்பு, இந்தியாவை 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்தாலோசித்தார்.

4 முறை முதல்வர், 3-வது முறை பிரதமர்: கடந்த 2001-ம் ஆண்டில் குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்றார். அதன்பிறகு தொடர்ச்சியாக 3 முறை குஜராத் முதல்வராக பதவியேற்றார். ஒட்டுமொத்தமாக 4 முறை முதல்வராக அவர் இருந்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டில் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி முதல்முறையாக பதவியேற்றார். 2019-ம் ஆண்டில் 2-வது முறையாக அவர் பதவியேற்றார். தற்போது 3-வது முறையாக அவர் பிரதமர் பதவியேற்றுள்ளார்.

நாட்டின் முதல் பிரதமர் நேரு கடந்த 1952, 1957, 1962 பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று 3 முறை தொடர்ச்சியாக பிரதமர் பதவியை வகித்தார். அந்த சாதனையை பிரதமர் நரேந்திர மோடி சமன் செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x