Published : 09 Jun 2024 09:55 PM
Last Updated : 09 Jun 2024 09:55 PM

பிரதமர் மோடி பதவியேற்பு விழா: கவனம் ஈர்த்த தருணங்கள்

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மூன்றாவது முறையாக பிரதமராகும் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

புதுடெல்லி: டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (ஜூன் 9) நடைபெற்ற விழாவில் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்பு நிகழ்வில், வெளிநாட்டுத் தலைவர்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், பாஜக தலைவர்கள், பல்துறை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் கவனம் ஈர்த்தவை:

  • டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஜூன் 9) இரவு சரியாக 7.23 நடந்த பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
  • பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் பிரதமர் மோடி தலைவணங்கி வணக்கம் தெரிவித்தார்.
  • ‘நான் நரேந்திர தாமோதரதாஸ் மோடி, கடவுளின் பெயரால்..’ என்று ஆரம்பித்து மோடி பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.
  • விழா மேடையில் பிரதமர் மோடி அமைச்சர்களாக பொறுப்பேற்பவர்களுடன் முன்வரிசையில் அமர்ந்திருந்தார்.
  • மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பதவியேற்க இருந்தவர்கள் மேடையில் அமர்ந்திருந்தனர்.
  • பிரதமர் மோடி ராஜ்நாத் சிங் உடன் உரையாடியபடி, விருந்தினர்களுக்கு மேடையில் இருந்தபடி கைகளைக் கூப்பி வணக்கம் தெரிவித்தார்.
  • மேடையில், பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஜெ.பி.நட்டா, சிவராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்ஷங்கர் என்ற வரிசையில் அமர்ந்திருந்தனர். இதே வரிசைப்படி பதவியும் ஏற்றுக்கொண்டனர்.
  • பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஜெ.பி.நட்டா, சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் இந்தி மொழியில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
  • நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்ஷங்கர் ஆங்கிலத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
  • மோடி 3.0 மத்திய அமைச்சரவையில் அமித் ஷா, ராஜ்நாத் சிங், எஸ்.ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோர் மீண்டும் இடம் பிடித்துள்ளனர்.
  • பாஜக கூட்டணியைச் சேர்ந்த சிராக் பஸ்வான், ராஜீவ் ரஞ்சன் சிங், ஜித்தன் ராம் மஞ்சி, ஆகியோர் மத்திய அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
  • ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 36 வயதான ராம்மோகன் நாயுடு கிஞ்சராபு தான் மோடி 3.0 அமைச்சரவையின் மிகவும் இளம் அமைச்சர். ராம்மோகன் நாயுடு தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான எர்ரான் நாயுடுவின் மகன்.
  • முன்வரிசையில் அமர்ந்திருந்த தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்களான நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு, ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் பிரதமர் மோடி பதவியேற்றபோது எழுந்து நின்று கரவொலி எழுப்பி வாழ்த்து தெரிவித்தனர்.
  • அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டவர்கள், பிரதமர் உள்ளிட்ட அனைவரையும் வணங்கி வாழ்த்துப் பெற்று பின்னர் தங்களது இருக்கைகளுக்குச் சென்றனர்.
  • பாரத ரத்னா விருது பெற்ற பிஹார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூரின் மகன் ராம்நாத் தாக்கூர் மத்திய இணை அமைச்சராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொணடார்.
  • மோடி 3.0 அமைச்சரவையில், நிர்மலா சீதாராமன், அன்னபூர்ண தேவி மற்றும் அனுப்ரியா படேல், ஷோபா கரந்த்லாஜே, ரக்ஷா காட்சே, சாவித்ரி தாக்கூர் ஆகிய பெண்கள் இடம்பெற்றிருந்தனர்.
  • கேரளாவில் இருந்து முதன் முறையாக பாஜக சார்பில் திருச்சூரில் வெற்றி பெற்ற நடிகர் சுரேஷ் கோபி மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
  • தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் எல்.முருகன் மீண்டும் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
  • முன்னாள் முதல்வர்களான சிவராஜ் சவுகான், மனோகர் லால் கட்டார், ஹெச்.டி.குமாரசாமி, சர்வானந்த சோனோவால் உள்ளிட்டோர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர்.
  • பிரதமர் நரேந்திர மோடி உள்பட 72 பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டவர்கள் யாருக்கும் இலாகா ஒதுக்கப்படவில்லை. நாளை இலாகா ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
  • பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் ‘பாரத் மாதா கி ஜி’ என்று அவ்வப்போது கோஷங்களை எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
  • அமைச்சரவையில் பிஹாருக்கு அதிகமான முக்கியத்துவமும், மேற்கு வங்கத்துக்கு மிக குறைவான முக்கியத்துவமும் அளிக்கப்பட்டிருந்தது.
  • வெளிநாட்டுத் தலைவர்களான மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, நேபாள பிரதமர் புஷ்ப கமால் தாஹல் பிரச்சந்தா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுகனாத், பூட்டான் பிரதமர் ஷெரிங் டாக்பே, வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனா, செசல்ஸ் துணை அதிபர் அகமது ஆஃபீஃப் ஆகியோர் முன்வரிசையில், அமர்ந்திருந்தனர்.
  • முன்னதாக பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே பேசுகையில், “கடந்த பத்து ஆண்டுகால பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா அபார வளர்ச்சி கண்டுள்ளது. விமான நிலையம், சாலை, ரயில்வே, தகவல் தொழில்நுட்பம் என உட்கட்டமைப்பு வசதிகளில் வளர்ச்சி கண்டுள்ளது. பல்வேறு துறைகளில் நேரடி அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளது,” என்று கூறினார்.
  • பிரதமரின் பதவியேற்பு நிகழ்வில் எதிர்க்கட்சிகள் தரப்பில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார்.
  • வெளிநாட்டுத் தலைவர்களுடன் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் தனது மனைவியுடன் அமர்ந்திருந்தார்.
  • மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஆகியோர் விழாவுக்கு வந்திருந்தனர்.
  • பிரதமரின் பதவியேற்பு நிகழ்ச்சியில் தொழிலதிபர் அம்பானி, நடிகர் ஷாருக் கான் அருகருகே அமர்ந்திருந்தனர்.
  • நடிகர் ரஜினிகாந்த் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் உடன் கலந்துகொண்டார்.
  • தமிழகத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சரத்குமார் ஆகியோர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர்.
  • குடியரசுத்தலைவர் மாளிகையில் நடந்த இந்த நிகழ்வில் 8,000 பேர் கலந்துகொண்டனர்.
  • பிரதமரின் பதவியேற்பு நிகழ்ச்சியையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
  • பதவியேற்பு விழா நடைபெறும் வளாகத்தில் பெரிய அளவிலான எல்இடி திரைகள் வைக்கப்பட்டிருந்தன.