Published : 09 Jun 2024 08:20 PM
Last Updated : 09 Jun 2024 08:20 PM

மோடி 3.0 | மத்திய அமைச்சர்கள் பட்டியல் - நிர்மலா சீதாராமன் முதல் புதுமுகம் ராம்மோகன் வரை

ராம்மோகன் நாயுடு, நிர்மலா சீதாராமன் | கோப்புப் படம் - படம் உதவி - எக்ஸ் தளம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதன்மூலம் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக 3வது முறையாக பதவியேற்றுள்ளார்.

மோடியுடன் 72 பேர்: மோடியைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, சிவ்ராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர், மனோகர் லால் கட்டார், பியூஷ் கோயல், ஹெச்டி குமாரசாமி, தர்மேந்திர பிரதான், ஜித்தன் ராம் மாஞ்சி, ராஜீவ் ரஞ்சன் சிங், சர்பானந்தா சோனோவால், வீரேந்திர குமார், தெலுங்கு தேசம் எம்.பி., ராம்மோகன் நாயுடு, பிரஹலாத் ஜோஷி, கிரிராஜ் சிங், அஸ்வினி வைஷ்ணவ், ஜோதிராதித்ய சிந்தியா, பூபேந்திர யாதவ், கஜேந்திர சிங் ஷெகாவத், கிரண் ரிஜிஜு, ஹர்தீப் சிங் புரி, மன்சுக் மாண்டவியா, ஜி.கிஷன் ரெட்டி, சிராக் பஸ்வான், ராவ் இந்தர்ஜித் சிங், ஜிதேந்திர சிங், அர்ஜூன் ராம் மேக்வால், ஜெயந்த் பாட்டீல், சிவசேனா எம்.பி. பிரதாப் ராவ், ஜித்தின் பிரசாதா, ஸ்ரீபத் யெஸோ நாயக், பங்கஜ் சவுத்ரி, கிருஷண் பால், ராம்தாஸ் அதாவலே, நித்யானந்த் ராய், ராம்நாத் தாக்கூர், அப்னா தளம் எம்.பி. அனுபிரியா படேல், வி.சோமன்னா, தெலுங்கு தேசம் எம்.பி. சந்திரா எஸ். பெம்மசானி, எஸ்.பி.சிங் பாகெல், சோபா சிங் கரந்தலஜே, கீர்த்தி வர்தன் சிங், பி.எ.வெர்மா, சுரேஷ் கோபி, எல்.முருகன், அஜய் தம்தா, பண்டி சஞ்சய் குமார், கம்லேஷ் பஸ்வான், பாகிரத் சவுத்ரி, சதீஷ் சந்திர துபே, ஜூவல் ஓரம், அன்னபூர்ணா தேவி, சாந்தனு தாக்கூர், ரவ்னீத் சிங், சஞ்சய் சேத், துர்கா தாஸ் உய்கே, ரக்‌ஷா கட்சே, சுகந்தா மஜும்தர், சாவித்ரி தாக்கூர், தோக்கான் சாஹு, ராஜ் பூஷன் சவுத்ரி, பூபதி ராஜு ஸ்ரீநிவாச வர்மா, ஹர்ஷ் மல்ஹோத்ரா, ஜெயந்திபாய் பம்பனியா, முரளிதர் மோஹோல் ஆகியோர் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி உள்பட 72 பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டவர்கள் யாருக்கும் இலாகா ஒதுக்கப்படவில்லை. நாளை இலாகா ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மீண்டும் அமைச்சரவையில்.. பிரதமர் மோடியின் அமைச்சரவையில் அங்கம் வகித்த ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர், பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ், எல்.முருகன் ஆகியோர் மோடி 3.0 மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர்.

புதுமுகம் ராம்மோகன் நாயுடு: இன்று நடந்த பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சராக தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி., ராம்மோகன் நாயுடு பதவியேற்றுள்ளார்.

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்மோகன் நாயுடு கிஞ்சராபு தான் மோடி 3.0 அமைச்சரவையின் மிகவும் இளம் அமைச்சர். 36 வயதான ராம்மோகன் நாயுடு தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான எர்ரான் நாயுடுவின் மகன். இவர் ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதியில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இன்றைய மத்திய அமைச்சரவையில் இளம் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ராம்மோகன், இளம் வயதில் மத்திய அமைச்சரான தனது தந்தையின் சாதனையை முறியடித்திருப்பதுடன் அந்தப் பாரம்பரியத்தையும் தொடர்கிறார். ராம்மோகனின் தந்தை எர்ரான் நாயுடு 1996-ம் ஆண்டு மத்திய அமைச்சராக தனது 39 வயதில் பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

18-வது மக்களவையில் பணக்கார எம்.பி. : அதேபோல் தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரசேகர பெம்மசானியும் மோடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.5700 கோடி. இவர் தான் மோடி 3.0 அமைச்சரவையின் மிகவும் பணக்கார அமைச்சராக அறியப்படுகிறார்.

பெம்மசானி சந்திரசேகர்

பெம்மசானி சந்திரசேகர் ஒரு மருத்துவர். அவர் 1999-ல் விஜயவாடாவின் என்டிஆர் ஹெல்த் சயின்சஸ் பல்கலைக்கழகத்தில் தனது எம்பிபிஎஸ் படிப்பையும், 2005-ல் பென்சில்வேனியாவின் டான்வில்லில் உள்ள கீசிங்கர் மருத்துவ மையத்தில் எம்டி முதுகலை படிப்பையும் முடித்துள்ளார். வெளிநாடுகளில் மருத்துவராகவும் இவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய கீதத்துடன்.. முன்னதாக, டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஜூன் 9) மாலை சரியாக 7.23 பதவியேற்பு விழா நடைபெற்றது. தேசிய கீதத்துடன் தொடங்கிய விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். ‘நான் நரேந்திர தாமோதரதாஸ் மோடி, கடவுளின் பெயரால்..’ என்று ஆரம்பித்து மோடி பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x