Published : 09 Jun 2024 05:55 AM
Last Updated : 09 Jun 2024 05:55 AM

3-வது முறையாக பிரதமராக இன்று பதவியேற்கிறார் மோடி

பிரதமர் மோடி | கோப்புப்படம்

புதுடெல்லி: டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று நடைபெறும் விழாவில் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார். இதையடுத்து, டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும், தனிப் பெரும்பான்மை (272) கிடைக்கவில்லை. அதேநேரம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 293 இடங்களில் வென்று ஆட்சியை 3- வது முறையாக தக்கவைத்துக் கொண்டது.

இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற் றது. இதில், என்டிஏ நாடாளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது, என்டிஏ எம்.பி.க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார். இதை ஏற்றுக் கொண்ட திரவுபதி முர்மு ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் 9-ம் தேதி (இன்று) இரவு 7.15 மணிக்கு புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில், பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொள்ள உள்ளனர். இந்த தகவல் குடியரசுத் தலைவர் மாளிகையின் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளிப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இலங்கை, வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவுகள், செஷல்ஸ் மற்றும் மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் தங்கள் வருகையை உறுதி செய்துள்ளனர். பிரதமர் மோடி 3-வது முறையாக பதவி யேற்றுக்கொண்ட பிறகு ஒரு வாரத்தில் வாராணசிக்கு செல்வார் என தகவல் வெளியாகி உள்ளது.

பாஜக ஆட்சியில் உள்ள மாநில முதல்வர்கள், அக்கட்சியின் மூத்த தலைவர்கள், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரைப்படம், விளையாட்டு, நீதி, மருத்துவம் உள்ளிட்ட துறைசார்ந்த பிரபலங்களுக்கு இவ்விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வந்தே பாரத் மற்றும் மெட்ரோ ரயில் பணியாளர்கள், சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள், சுகாதார பணியாளர்கள், 3-ம் பாலினத்தவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, மத்திய திட்டங்களின் பயனர்கள் (விச்சித் பாரத்தூதர்கள்). பழங்குடியின பெண்கள், பத்ம விருது பெற்றவர்கள், பல்வேறு மதத் தலைவர்கள் உள்ளிட்ட சுமார் ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பதவியேற்பு விழாவில் திரிணமூல் காங்கிரஸ் பங்கேற்காது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெற உள்ளதால் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக குடியரசுத் தலைவர் மாளிகை பகுதியில் 5 கம்பெனி துணை ராணுவப் படையினர், தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள், ட்ரோன்கள் என பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தரை முதல் வான்பகுதி வரையில் தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், டெல்லியின் எல்லைகள் மற்றும் போக்குவரத்து சோதனை மையங்களில் தீவிர தணிக்கை நடத்தப்படுகிறது. அவசரகால கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ள இதனிடையே, குடியரசுத் தலைவர் மாளிகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை டெல்லி காவல் துறை உயர் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். வெளிநாட்டு தலைவர்கள் தங்க உள்ள ஓட்டல்களும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு உள்ளன.

டிடிபிக்கு 4, ஜேடியுவுக்கு 2: பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிக்கு (டிடிபி) 4. நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு (ஜேடியு) 2 அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

டிடிபியைச் சேர்ந்த ராம் மோகன் நாயுடு ஹரிஷ் பாலயோகி மற்றும் டக்குமுல்லா பிரசாத் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபோல ஜேடியு-வைச் சேர்ந்த லலன் சிங் மற்றும் ராம் நாத் தாக்குர் (பாரத ரத்னா கற்பூரி தாக்குர் மகன்) ஆகிய இருவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x