Published : 09 Jun 2024 07:03 AM
Last Updated : 09 Jun 2024 07:03 AM
புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் பாஜகவின் தோல்வி குறித்து மிக அதிகமாக பேசப்படும் தொகுதி அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத். சுமார் 500 ஆண்டுகளாக தொடர்ந்த பிரச்சினை முடிவுக்கு வந்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது. இதன் மூலம் பாஜகவுக்கு தேசிய அளவில் அரசியல் பலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், அயோத்தியின் தோல்வியை பாஜகவினரால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த தோல்வியின் பின்னணியில் பல்வேறு காரணங்கள் வெளியாகி வருகின்றன.
உ.பி.யில் பைசாபாத் மக்களவைத் தொகுதியின் கீழ் அயோத்தி வருகிறது. பைசாபாத்தில் பாஜகசார்பில் இரண்டு முறை எம்.பி.யான லல்லுசிங், இம்முறையும் போட்டியிட்டார். இவர் அயோத்தியில் 5 முறை எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார். உயர்க்குடியான தாக்குர் சமூகத்தை சேர்ந்த லல்லு, சமாஜ்வாதி கட்சியின் தலித் வேட்பாளர் அவ்தேஷ் பிரசாத்திடம் 54,567 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
அயோத்தியில் தலித் சமூகத்தினருக்காக மத்திய, மாநில பாஜக அரசுகள் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளன. இங்குபுதிதாக தொடங்கப்பட்ட சர்வதேசவிமான நிலையத்திற்கு மஹரிஷிவால்மீகி எனப் பெயரிடப்பட்டிருந்தது. இந்த சூழலில், பாஜக வேட்பாளர் லல்லு சிங் பிரச்சாரத்தில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து அவரது தோல்விக்கு முக்கியக் காரணமானது.
லல்லு தனது பிரச்சாரத்தில், “மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க 272 தொகுதிகள் போதுமானது. ஆனால் அம்பேத்கர் வடிவமைத்த இந்திய அரசியல் சட்டத்தை மாற்ற 3-ல் 2 பங்கு பெரும்பான்மை தேவைப்படுகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனை இண்டியா கூட்டணி தலைவர்கள் நாடு முழுவதும் தங்கள் பிரச்சாரத்தில் முன்னெடுத்தனர். பாஜக ஆட்சி அமைத்தால் அரசியல் சட்டம் மாற்றப்படும் என அச்சுறுத்தினர். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் மறுப்பு தெரிவித்தனரே தவிர, லல்லுசிங் எதுவும் கூறவில்லை. மேலும் 2019 உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு ராமர்கோயில் கட்டுவதில் காட்டிய அக்கறையை பாஜக, அயோத்திவாசிகளின் நலனில் காட்டவில்லை.
ராமர் கோயில்: ராமர் கோயில் கட்டப்பட்டபோதுஉள்ளூர் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை பாஜக ஈடுசெய்யவில்லை. கோயிலுக்காக பல கட்டிடங்கள், குடியிருப்புகள் அகற்றப்பட்டன. இவற்றின் உரிமையாளர்களுக்கு இழப்புத் தொகை மிகவும் குறைவாகவே வழங்கப்பட்டது. வெளிமாநில மக்கள் அயோத்தியில் நுழைந்து பலன் பெறுகின்றனர்.
இச்சூழலை சாதகமாக்கிக் கொண்ட சமாஜ்வாதி தனக்கான ஆதரவை அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் ஏற்பட்ட பலனாக 2022 சட்டப்பேரவை தேர்தலில் பைசாபாத்தின் 5 தொகுதிகளில் கொசைன்கச், மில்கிபூரை சமாஜ்வாதி கைப்பற்றியது. இவ்விரண்டு தொகுதிகளும் முந்தைய இரண்டு தேர்தல்களாக பாஜக வசம் இருந்தவை.
வழக்கமாக அயோத்தியின் தேர்தல் உயர்க்குடி வகுப்பினர் மற்றும் பிற சமூகத்தினருக்கு இடையிலானதாக இருந்தது. இங்கு யாதவ் உள்ளிட்ட ஓபிசி 22%, தலித் 21%, முஸ்லிம்கள் 18% உள்ளனர். இதில், வேட்பாளர்களாக பாஜக உயர்க்குடி வகுப்பினரையும் சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகள் இதர சமூகத்தினரையும் நிறுத்தி வந்தன.
சமாஜ்வாதி முதல்முறையாக தலித் வேட்பாளராக தனது மில்கிபூர் எம்எல்ஏ அவ்தேஷ் பிரசாத்துக்கு வாய்ப்பளித்தது. காங்கிரஸுடன் கூட்டணி வைத்ததால் அதன் கணிசமான வாக்குகளும் சமாஜ்வாதிக்குகிடைத்தன. அயோத்தியின் தாக்கத்தினால், அதன் அண்டை தொகுதிகளான பஸ்தி, பாரபங்கியிலும் சமாஜ்வாதி வெற்றிபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT